அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனையில் வீதியில் நின்ற நபரை முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலைசெய்த சந்தேக நபர்களை சம்மாந்துறை பொலிஸார் தேடி வருகின்றனர்.
கடந்த 26 ஆம் திகதி அன்று மாலை 6 மணியளவில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வீரமுனை பகுதியில் வீதியில் நின்ற 30 வயது நபர் ஒருவரை முன்விரோதம் காரணமாக மதுபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்த 10 பேர் அடங்கிய குழுவினர் வாள் மற்றும் ஆயுதங்களால் தாக்கி படுகாயமடையச்செய்து தப்பி சென்றுள்ளனர்.
இத்தாக்குதல் காரணமாக படுகாயமடைந்த நபர் உயிராபத்துடன் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் வீரமுனையை பிரதான வீதியை சேர்ந்த அசோக் என்பவரே உயிரிழந்துள்ளார்.
இத்தாக்குதல் சம்பவத்தின் போது வாள்வெட்டு குழு உறுப்பினர் ஒருவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பில் அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜெயந்த ரட்நாயக்கவின் கட்டளையின் படி சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி நௌபரின் வழிகாட்டலில் குற்றப்புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி விஜயராஜா தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டு கடந்த ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை பதில் நீதிவான் முன்னால் ஆஜர்படுத்தப்பட்டு சிறைச்சாலை உத்தியோகத்தர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளார்.
மேலும் தப்பி சென்ற சந்தேக நபர்களினால் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட வாள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் விசாரணைக் குழுவினர் மீட்டுள்ளதுடன் ஏனைய தப்பி சென்ற சந்தேக நபர்களை தேடும்பணி முடக்கிவிடப்பட்டுள்ளது.
மதுபோதையில் இளைஞர்கள் மேற்கொண்ட இந்த வாள்வெட்டு சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

