மட்டக்களப்பு நகரில் 26 கொரனா தொற்றாளர்கள் கண்டுபிடிப்பு – 17வர்த்தக நிலையங்களுக்கு பூட்டு


மட்டக்களப்பு நகரில் இன்று மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 26பேர் கொரனா தொற்றுக்குள்ளானது கண்டறியப்பட்டுள்ளதாக பொதுச்சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இன்று காலை முதல் மட்டக்களப்பு நகரில் உள்ள வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள்,ஊழியர்களுக்கு காந்திபூங்காவில் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்று மாலை வரையில் முன்னெடுக்கப்பட்ட 549 அன்டிஜன் பரிசோதனையில் 26பேர் கொரனா தொற்றுக்குள்ளானது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு நகரில் உள்ள அனைத்து வர்த்தக நிலையங்களில் கடமையாற்றும் உரிமையாளர்கள்,ஊழியர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனைகளுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் ஒரு பகுதியாக இன்று மட்டக்களப்பு நகரில் 549பேர் முன்னெடுக்கப்பட்டதாகவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக இந்த சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாகவும் இன்னும் தொற்றாளர்கள் இருக்கலாம் எனவும் மக்கள் வெளியில் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் சுகாதார துறையினர் தெரிவித்தனர்.

இதில் அதிகமானோர் காத்தான்குடி பகுதியில் இருந்து மட்டக்களப்பில் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் எனவும் சுகாதார பிரிவினர் தெரிவித்தனர்.

இதேநேரம் குறித்த வர்த்தக நிலையங்களுக்கு சென்று பொருட்கொள்வனவில் ஈடுபட்டவர்கள் அவர்களுடன் தொடர்புகொண்டவர்களை தனிமைப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

பொலிஸார்,இராணுவத்தினர்,சுகாதார துறையினர்,மாநகரசபை ஊழியர்கள் இணைந்து இந்த பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.வர்த்தக நிலையங்களில் உள்ள விபரங்களின் அடிப்படையில் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் மட்டக்களப்பு நகரில் உள்ள 17 வர்த்தக நிலையங்களில் கொரனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட நிலையில் குறித்த வர்த்தக நிலையங்கள் சுகாதார பிரிவினரால் மூடப்பட்டுள்ளன.

அத்துடன் அந்த வர்த்தக நிலையங்களுடன் தொடர்புபட்டவர்களின் விபரங்கள் பெறப்பட்டு அவர்களை தனிமைப்படுத்தும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

குறித்த வர்த்தக நிலையங்களுடன் தொடர்புபட்டவர்கள் தாமாகவே முன்வந்து சுகாதார பிரிவினருக்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் சுகாதார பிரிவினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.