மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அதிகாரிகளின் பணி புறக்கணிப்பு காரணமாக உயிரிழந்த சிறுமி


விபத்து காரணமாக காயமடைந்த சிறுமி ஒருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலை அதிகாரிகளின் பணி புறக்கணிப்பு காரணமாக குறித்த சிறுமி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு தேத்தாத்தீவு பிரதான வீதி பகுதியில் நேற்று இடம்பெற்ற விபத்து ஒன்றில் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட 7 வயதுடைய சிறுமியின் விபத்து நிலையினை எக்ஸ்ரே படம் எடுப்பதற்கு முடியாத நிலையில் இருப்பதாக வைத்தியர்கள் நேற்றய தினம் குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தனர்.

இந்நிலையில் நேற்று மூன்று மணித்தியாலங்கள் கழித்து எக்ஸ்ரே எடுக்கப்பட்டதால் குறித்த சிறுமியின் உடல்நிலை மேசமானதாகவும் வைத்தியர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் வைத்தியசாலை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த மயில்வாகனம் சனுசியா சிகிச்சை பலனின்றி இன்றைய தினம் உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் உயிரிழப்புக்கு வைத்தியசாலை அதிகாரிகளின் கவனயீனம் காரணம் என குற்றச்சாட்டினை முன்வைப்பதுடன், இது தொடர்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளதாக சிறுமியின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறான நிலையில் குறித்த சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் கே.கலாரஞ்சனியிடம் கேட்டபோது குறித்த சிறுமியின் உயிரிழப்பு தொடர்பாக வைத்தியசாலை மட்ட விசாரணை நடாத்தப்பட்டு அதற்கான நடவடிக்கையினை எடுப்பதாக தெரிவித்தார்.