விலங்கினை திறந்து விரைவில் வெளியே வருவார் –சட்டத்தரணி மங்களா


பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் பொதுமன்னிப்பிலேயோ விலங்கினையுடைத்தோ வெளிவரமாட்டார்,அவரின் கைகளில் உள்ள விலங்கனை சட்டத்தின் அடிப்படையில் திறப்பால் திறந்து மிக விரைவில் வெளிவருவார் என சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் திருமதி மங்களா சங்கர் தெரிவித்தார்.

ஜனாதிபதியினால் முன்னெடுக்கப்படும் நாட்டை கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் ஒரு இலட்சம் கிலோமீற்றர் வீதிகளை புனரமைக்கும் தேசிய வேலை திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல வீதிகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டன.

இதன் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் மேற்கு பிரதேசசபைக்குட்பட்ட அரசடித்தீவு,சந்திரகாந்தன் வீதி புனரமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் முன்மொழிவுக்கு அமைவாக இந்த வீதி புனரமைக்கப்படவுள்ளது.

வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் சுமார் ஒரு கிலோ மீற்றர் வீதி சுமார் 25இலட்சம் ரூபா செலவில் புனரமைத்துவைக்கப்படவுள்ளது.இதன் புனரமைப்பு பணிகள் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினரும் மாவட்ட அபிவிருத்திக்குழுவின் இணைத்தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனின் இணைப்புச்செயலாளர் சட்டத்தரணி திருமதி மங்களா சங்கர்,வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று பொறியியலாளர் என்.சசினந்தன், மண்முனை தென் மேற்கு பிரதேசசபையின் தவிசாளர் என்.புஸ்பலிங்கம் மற்றும் பிரதேசசபை உறுப்பினர்கள், தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பிரதேச வட்டார அமைப்பாளர்கள் கலந்துகொண்டனர்.

மிகவும் மோசமான நிலையில் மக்கள் பயணிப்பதற்கு மிகவும் கஸ்டங்களை எதிர்கொண்ட வீதியானது இதன்போது புனரமைக்கப்படவுள்ளது.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

அரசாங்கத்துடன் பயணிப்பது என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த பயணம்.இந்த மாவட்டத்தின் தேவைகள் என்பது மிகவும் அதிகமானது.பல தேவைகளுடன் இந்த மாவட்ட மக்கள் உள்ளனர்.

எமது பிரதேசத்தினை அபிவிருத்திசெய்யும் வகையிலான முன்னெடுப்புகளை மேற்கொள்ளவேண்டும்.

நாங்கள் எமது உரிமையினையும் பாதுகாத்துக்கொண்டு மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்திசெய்கின்ற நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவேண்டும்.இந்த பிரதான இரண்டு விடயங்களையும் முன்னெடுத்து செல்கின்ற தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் தலைவரின் பொறுப்பு என்பது மிகவும் கடினமானதும் பொறுப்பு வாய்ந்ததுமாகும்.எங்களது மாவட்டத்தினை அபிவிருத்திசெய்வதற்கு அரசாங்கத்திடம் இருந்து அபிவிருத்திகளை கொண்டுவந்துகொடுக்கவேண்டிய பொறுப்பு அவருக்கு உள்ளது.

இன்று பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தன் எவ்வாறு சிறையில் இருந்து அபிவிருத்தி செய்யப்போகின்றார்,ஏன் கூட்டங்களுக்கு வரவில்லையென்ற கோசமும் சகல அனுமதிகளுடன் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துகொண்டதற்கும் பல விமர்சனங்கள்.அவர் ஐந்து வருடங்களுக்கு மேல் சிறையில் இருந்துவிட்டார்.அவரின் விடுதலை தொடர்பான மேன்முறையீடு இறுதி தறுவாயில் இருக்கின்றது.அவர் பொதுமன்னிப்பு ஊடாகவோ சிலர் மேடைகளில் பேசுவதுபோன்று விலங்களை உடைத்தோ வெளியில் வரமாட்டார்.அவரது கையில் உள்ள விலங்கனை சட்டத்தின்படி திறப்பினால் திறந்துதான் வெளியில் வருவார்.சட்ட ரீதியான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.மிக விரைவில் வெளியேவந்து இன்னும் கூடுதலான அபிவிருத்திப்பணிகளை மேற்கொள்வார்.