தனது 144 வது அகவையில் தடம் பதிக்கும் மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் கல்லூரி



மட்டுநகரின் பிரபலம் வாய்ந்த பாடசாலைகளுள் ஒன்றான புனித சிசிலியா பெண்கள் கல்லூரி (தேசிய பாடசாலை) ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் (22/11/2020) 144 வருடங்கள் பூர்த்தியடைகிறது.

1876ம் ஆண்டு அருட்தந்தை பிரான்சிஸ் சேவியர் அவர்களால் நிறுவப்பட்ட இக்கல்லூரி 1922இல் அப்போஸ்தலிக்க கார்மேல் சகோதரிகளிடம் கையளிக்கப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை பல்வேறு துறைகளில் தேர்ச்சி பெற்ற மாணவிகளை  உருவாக்குவதில்  சிசிலியாப் பெண்கள் கல்லூரி பாரிய பங்காற்றுகிறது.

இதனைத் தொடர்ந்து கொவிட்19  காரணமாக பழைய மாணவிகள் பௌதீக ரீதியிலான கொண்டாட்டங்களை தவிர்த்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தது மட்டுமன்றி, பல ஆக்கபூர்வமான படைப்புகளுடன்  தங்களது திறமைகளையும் வெளிப்படுத்தினர்.

இதன் முதற்கட்டமாக பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப் போட்டியும் பழைய மாணவிகளுக்கான கவிதை, கட்டுரை போன்ற போட்டிகளும் இடம்பெற்றதுடன் கல்லூரியின் பழைய மாணவிகளின் அதிகாரபூர்வமான Facebook Page மற்றும் Youtube Channel அறிமுகம் செய்து வைக்கப்பட்டது.

இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் சமூக பொறுப்பினை முன்னிறுத்தி கல்லூரி தின கொண்டாட்டங்களில் ஈடுபட முடியுமென நிரூபித்ததுடன் தொடர்ந்தும் இத்தளங்களின் மூலம் வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொணர முடியுமென கல்லூரியின் பழைய மாணவிகள் சங்கம் நம்பிக்கை கொண்டுள்ளது.