வியாழேந்திரனை மாவீரர் தினத்தினை பொதுவெளியில் நடத்துமாறு சுமந்திரன் எம்.பி.சவால்


மாவீரர் தினம் நடாத்துவதற்க அரசாங்க தடைவிதிக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ள நிலையில் வியாழேந்திரன் முன்நின்று மாவீரர் தின நிகழ்வினை பொது அரங்கில் நடாத்துமாறு ஜனாதிபதி சட்டத்தரணியும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் மாவீரர் தின நிகழ்வுகளை நடாத்துவதற்கு முற்படுவதாகவும் அதற்கான தடையுத்தரவினை வழங்குமாறும் கொக்கட்டிச்சோலை பொலிஸாரினால் மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் தடையுத்தரவு ஒன்றுபெறப்பட்டுள்ள வழக்கில் ஆஜராகிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.கே.சுமந்திரன், 

இன்றைய தினம் நகர்த்தல் பத்திரம் ஒன்று சமர்ப்பிக்கப்பட்டு 106:04 கீழ் அதனை நீக்குமாறு கோரப்பட்டது. அதற்கான காரணங்களை நான் மன்றிலே சமர்ப்பித்திருக்கின்றேன். இந்த பொதுத் தொல்லைகளை தணிக்கின்ற அத்தியாயம் வீதியிலே மரங்கள் விழுந்து கிடந்தால் அல்லது ஆற்றிலே நீரோட்டத்தை தடுத்தால் அப்படியான விடயங்கள் சம்பந்தமாகத்தான் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படுத்துகின்ற விடயங்களை தணிப்பதற்காக கொடுக்கப்பட்ட நியாயாதிக்கம் என்றும் அந்த நியாயாதிக்கத்தின் கீழே குற்றச் செயலை செய்ய முற்படுகின்றார்கள் என்று உத்தரங்கள் பெறமுடியாது என்ற என்னுடைய வாதத்தை முன்வைத்திருக்கின்றேன். 

அத்தோடு எந்த சட்டத்தையும் நாங்கள் மீறமாட்டோம், பயங்கரவாத தடுப்புச் சட்டத்தையோ தனிமைப்படுத்தல்,தொற்றுநோய் பரவாமல் தடுத்தல் போன்ற சட்டங்களையோ நாங்கள் மீறமாட்டோம் என்ற சட்டங்களையோ நாங்கள் மீறமாட்டோம் என்கின்ற உத்தரவாதத்தினையும் நாங்கள் நீதிமன்றத்திற்கு வழங்கியுள்ளோம்.

அதற்கு மாறாக கொக்கட்டிச்சோலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தமிழீழ விடுதலைப்புலிகளின் இலட்சினைபோன்றவற்றினை பாவிக்கப்போவதாக எங்களுக்கு தகவல் கிடைத்ததால்தான் தடையுத்தரவினை பெற்றதாக குறிப்பிட்டார்.

இது தொடர்பான நீதிமன்ற கட்டளையை எதிர்வரும் 26ஆம் திகதி வழங்குவதாக நீதிபதி அறிவித்தார்.

மாவீரர் தினம் நடாத்துவதற்க அரசாங்க தடைவிதிக்கவில்லையென இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ள கருத்து தொடர்பில் சுமந்திரனிடம் கேட்டபோது,

வியாழேந்திரன் முன்நின்று மாவீரர் தின நிகழ்வினை பொது அரங்கில் நடாத்துமாறு நான் அழைப்பு விடுக்கின்றேன் என்றார்.