தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து சந்தேக நபர்களும் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மேலும், முன்னாள் மாகாண சபை உறுப்பினர் பிரதீப் மாஸ்டர் என அழைக்கப்படும் எட்வின் சில்வா கிருஸ்ணானந்த ராஜா, கஜன் மாமா எனப்படும் கனகநாயகம் மற்றும் இராணுவப்புலனாய்வு உத்தியோகஸ்தரான எம்.கலீல், முன்னாள் இராணுவ சிப்பாயான மதுசிங்க (வினோத்) ஆகியோரையும் தலா 2 சரீரப்பிணையில் மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் பிணையில் விடுவித்துள்ளது.
2015ஆம் ஆண்டு தாங்கள் கைதுசெய்யப்பட்டு குற்ற ஒப்புதல் வாக்குமூலம்பெறப்பட்ட 1ஆம் 02ஆம் எதிரிகளின் வாக்குமூலமானது சுயேட்சையாக வழங்கப்படவில்லை, தூண்டுதல் அல்லது அச்சுறுத்தல் காரணமாக அந்த வாக்குமூலத்தினை வழங்கியிருந்தார்கள்,பயங்கரவாத தடுப்புப்பிரிவினரால் நேரடியாக நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு வாக்குமூலம் வழங்கியிருந்ததாக தெரிவித்து மேன்முறையீட்டு நீதிமன்றில் செய்யப்பட்ட மீளாய்வு விண்ணப்பித்ததன் பிரகாரம் குறித்த ஒப்புதல் வாக்குமூலத்தினை மேன்முறையீட்டு நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
அந்த அடிப்படையில் மட்டக்களப்பு மேல்நீதிமன்றத்தில் சட்டமா அதிபரின் ஒப்புதலின்பேரில் பிணை வழங்கப்பட்டுள்ளது.
பிள்ளையான் உள்ளிட்ட ஏனைய சந்தேகநபர்கள், மட்டக்களப்பு மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் முன்னிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவர் தொடர்பான விசாரணை நடைபெற்றது.குறித்த பிணை மனுவினை ஆராய்ந்த மேல் நீதிமன்ற விசேட நீதிபதி டி.சூசைதாசன் ஆராய்ந்தார்.
இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பின் சார்பில் படுகொலைசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப்பரராஜசிங்கத்தின் மனையின் வேண்டுகோளின் பேரில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.கே.சுமந்திரன் ஆஜராகியிருந்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த குற்றவியல் நடவடிக்கைகளில் பங்குபெறுவதற்கு முழதான உரித்து இருக்கின்றது என்கின்ற 2015ஆம் ஆண்டு 04ஆம் இலக்க சட்டத்தில் இருந்து மேற்கொள்காட்டி பிணை வழங்குவது தொடர்பில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் விளக்கம் நடைபெறுகின்றபோது பிணை வழங்குவதில்லையென்கின்ற சட்டமா அதிபருடைய வழமையான நிலைப்பாட்டுடன்தான் அனைத்து வழங்குகளும் நடைபெற்றுவருகின்றன.மற்றைய வழக்குகளில் தமிழ் அரசியல் கைதிகள் எவருக்கும் பிணை வழங்கப்படாத நிலையிருக்கின்றது சூழ்நிலையில் இங்கும் பிணை வழங்குவதை ஆட்சேபிப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும் பயங்கரவா தடைச்சட்டத்தின் 7:1காப்பு வாசகத்திற்கு அமைவாக சட்டமா அதிபர் சந்திரகாந்தனுக்கும் மற்றைய சந்தேக நபர்களுக்கும் ஆட்சேபனையில்லையென தெரிவித்திருப்பதன் காரணமாக சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட ஐந்து பேருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.
தலா ஒரு இலட்சம் பெறுமதியான இரண்டு சரீரப்பிணையில் குறித்த ஐந்து பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், குறித்த வழக்கு விசாரணைகளை தொடர்வதா தள்ளுபடி செய்வதா என்பது தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் 8ஆம் திகதி அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி அறிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ம் திகதி மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டார்.
குறித்த சம்பவம் தொடர்பாகவே சிவநேசதுரை சந்திரகாந்தன் உள்ளிட்ட ஐவரும் சந்தேகத்தின் பேரில் கடந்த 2015 ஆண்டு கைது செய்யப்பட்டு, தடுத்துவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.