தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் -இரா.துரைரெட்னம்


பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ள சந்திரகாந்தன் மற்றும் முன்னாள் அமைச்சர் ரிசாத் பதியுதீன் போன்றவர்கள் விடுதலைசெய்யப்பட்டுள்ள நிலையில் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளையும் விடுதலைசெய்ய அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் ஈபிஆர்எல்எப்.இன் பத்மநாபா மன்றத்தின் தலைவருமான இரா.துரைரெட்னம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தவேண்டுகோளை அவர் விடுத்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரையில் நீதி இறந்துவிட்டதா என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. கடந்த வாரம் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் ரிஷாத் பதியுதீன், சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோர் பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு இன்று விடுதலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். இதேபோல கடந்த காலத்தில் இந்த சமூகத்திற்காக உழைத்த பல போராளிகள், இந்த சமூகத்திற்காக உழைத்த பல இளைஞர்கள் கைது செய்யப்பட்டு இதுவரை எந்தவித விசாரணையுமின்றி தடுப்புக் காவலில் வைக்கப்பட்டு இன்னும் விடுதலை செய்யப்படாமலிருப்பது இலங்கை அரசாங்கத்தின் நீதி கட்சி ரீதியான போக்கிற்கு செல்கின்றதா என்ற சந்தேகத்தை மக்கள் மத்தியில் எழுப்பியுள்ளது. 

ஒருசில இளைஞர்கள் தமது உறவுகளைக்கூட பார்க்க முடியாத அளவிற்கு சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் நாங்கள் ரிஷாத் பதியுதீனையோ சிவநேசதுரை சந்திரகாந்தனையோ விட்டுவிட வேண்டாமென கூறவில்லை. ஆனால் இவர்களை எந்த சட்டத்தின் கீழ் அரசாங்கம் விடுதலை செய்ததோ அதே சட்ட நுணுக்கங்களை பயன்படுத்தி கடந்த காலங்களில் கைது செய்யப்பட்டு எந்தவித குற்றமும் நிரூபிக்கப்படாமலிருக்கின்ற இளைஞர்களையும் விடுதலை செய்ய வேண்டும். அப்படி விடுதலை செய்தால் மட்டுமே இந்த அரசாங்கத்தின் ஆட்சி நல்லாட்சியாக கொள்ளப்படும். அப்படியில்லாவிடில் இந்த அரசானது நீதியை ஒருபக்கக் கட்சி சார்பாக பயன்படுத்துகின்ற அரசாக மாறுகின்றது என்ற குற்றச்சாட்டை இந்த அரசிற்கு நான் முன்வைக்க விரும்புகின்றேன்.

கிட்டத்தட்ட 75வருடங்களாக தமிழ் மக்கள் தங்களது உரிமைகளுக்காக போராடி அந்த உரிமையானது அகிம்சை ரீதியாக ஜனநாயக ரீதியாக வெல்ல முடியவில்லை என்ற காரணத்தினால் ஆயுதப் போராட்டமானது வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்பட்டது. இந்தப் போராட்டத்தில் பங்குபற்றிய பலர் இந்த மண்ணிற்காகவும் விடுதலைக்காகவும் மரணித்திருக்கின்றார்கள். அப்படிப்பட்டவர்ளை மனித நேயத்தோடு தமிழர்களின் கலாசாரத்திற்குட்பட்ட அஞ்சலி செலுத்துதல் என்ற விடயத்தை இந்த அரசு மறுக்கின்றது என்பது இந்த நாட்டில் மனித நேயத்திற்கு விடப்படுகின்ற சவாலாகும். 

இந்த அரசானது பயங்கரவாதம் என்ற போர்வையில் இறந்த ஒரு மனிதனுக்கான கடமைகளை செய்வதை தடுப்பதென்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும். வடக்கு கிழக்கை பொறுத்தவரையில் இந்த வாரத்தில் தியாகத்திற்குரிய பலரை நினைவுகூறும் நிகழ்வுகள் அனுஷ்டிக்கப்படும் நிலையில் அரசாங்கமானது பல தடைகளை விதித்துள்ளது. வரும் ஞாயிற்றுக் கிழமையானது தமிழர்களின் பண்பாடுகளில் ஒன்றான கார்த்திகை தீபத்திருநாளாகும். அதைக்கூட தடை செய்து விடுவார்கள் என்ற பயம் எனக்கு இருக்கின்றது. இலங்கை அரசானது ஒருபக்கச்சார்பான இன ரீதியான அடிப்படை சுதந்திரங்களை மீறுகின்ற செயற்பாடுகளை கைவிட்டு இந்த மக்கள் மனித நேயமுள்ள மக்கள்,ஜனநாயக ரீதியான மக்கள்,இலங்கைக்குள் வாழ்கின்ற தமிழ் மக்கள் என்பதை ஏற்றுக்கொண்டால் எதிர்வரும் காலங்களில் இறந்த மனிதர்களுக்காக செய்யப்படுகின்ற கடமைகளை அனுஷ்டிப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும். 

இலங்கையைப் பொறுத்தவரை கொரொனா தாக்கம் அதிகரிக்கும் என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் இன்றும்கூட ஒருவர் அடையாளங் காணப்பட்டிருக்கின்றார். எதிர்வரும் காலங்களில் மட்டக்களப்பில் தொற்றுகள் அதிகரிக்கலாம் என்ற நிலையில் அரசானது மட்டக்களப்பு மாவட்டத்திற்கென விஷேட கொரொனா வேலைத்திட்டங்களை செயற்படுத்துவதோடு அதற்கான நிதி வழங்கலை அதிகரித்து செயற்பாடுகளையும் அதிகரிக்க வேண்டும். கொரொனா காரணமான தனிமைப்படுத்தப்பட்டிருப்பவர்களும் கூலித்தொழில் செய்கின்றவர்களும் மிகவும் வறுமையில் வாடுகின்றனர். இவர்களுக்கான விஷேட நிவாரணத் திட்டத்தை மேற்கொண்டு தொடர்ச்சியாக இவர்களுக்கான நிவாரணங்களை வழங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் கடந்த வாரம் மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் கிழக்கு மாகாணத்திற்கென அமைக்கப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிக்கான செயலணியை ஒரு அமைச்சின் கீழிருந்து நேரடியாக பல விடயங்களை உள்ளடக்கிய வர்த்தமானி பிரகடனப்படுத்தப்பட்டு ஜனாதிபதியின் கீழ் உள்ளடக்கப்பட்டிருக்கின்றது. இந்த விடயமானது மறைமுகமான கேள்வி கேட்க முடியாத பன்முகத்தன்மை இல்லாத பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளால் கேள்வி கேட்க முடியாத பொறுப்புக் கூற முடியாதளவிற்கு கிழக்கு மாகாணத்திற்கென தொல்பொருள் ஆராய்ச்சிக்கான செயலணியை ஜனாதிபதி கொண்டு வந்திருக்கின்றார். குறிப்பாக ஆளும் தரப்பை சேர்ந்த கௌரவ அமைச்சர் அவர்களும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களும் ஏன் மௌனமாக இருந்தார்கள் என்ற கேள்வி சமூகத்தின் மத்தியில் தொக்கி நிற்கின்றது. 

கிழக்கு மாகாணத்திற்கென அமைக்கப்பட்ட தொல்பொருள் ஆராய்ச்சிக்கான செயலணி ஏற்கனவே பல சந்தேகங்களை விளைவித்து மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாததாக இருந்த நிலையில் மீண்டும் ஜனாதிபதி அவர்கள் அதனை வர்த்தமானி மூலம் தனக்குக் கீழே கொண்டு வந்ததென்பது வெளிப்படைத் தன்மை இல்லாத மக்கள் பிரதிநிதிகளால் கேள்வி கேட்க முடியாதளவிற்கு கொண்டு வந்தது கண்டிக்கத்தக்க செயற்பாடாகும். 

புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டதன் பின்னர் கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களால் திட்டமிட்ட குடியேற்றங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. கடந்த மாதம் பத்திரிகை துறையை சார்;ந்தவர்களாலும் பண்ணையாளர்களாலும் வெளிக்கொண்டுவரப்பட்ட மயிலத்தமடு,மாதவனை திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்கள் போல வவுனதீவு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள கொதம்பா சின்னாற்றுவெட்டை பகுதியிலும் பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள திவுலானை, கெவிலியாமடு பகுதிகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் காணிகளை அளந்து கொடுத்து விவசாயச் செய்கைக்காக சிங்கள மக்களுக்கு வழங்குகின்ற செயற்பாடுகளை கிழக்கு மாகாண ஆளுநர் கொண்டுவந்திருக்கின்றார். 

கிழக்கு மாகாணத்தில் 40வீதம் தமிழர்களும் 37வீதம் முஸ்லிம்களும் 23வீதம் சிங்களவர்களும் வாழ்கின்றனர். ஆளுநர் அவர்கள் இனரீதியாக செயற்பட்டால் இனரீதியான குரோதங்களும் வன்முறைகளும் தலைதூக்கும் என்பதை புரிந்துகொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் இப்படியான செயற்பாடுகளை நிறுத்த வேண்டும். இனரீதியாக நடந்துகொண்டால் அவரை நீக்கிவிட்டு மாண்புமிகு ஜனாதிபதி அவர்கள் புதிதாக ஒருவரை ஆளுநராக நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.