ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு கல்வி வலயம் சாதனை -434 மாணவர்கள் சித்தி


வெளியாகியுள்ள 2020 ஆம் ஆண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 434 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாக மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தெரிவித்தார்.

2020 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைக்கு மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 1942 மாணாவர்கள் தோற்றியிருந்த நிலையில் நேற்று வெளியான பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் 434 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தின் மட்டக்களப்பு நகர் பாடசாலைகளான மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் தேசிய பாடசாலையில் 121 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

புனித மிக்கேல் கல்லூரியில் 158 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 74 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.புனித சிசிலியா பெண்கள் கல்லூரியில் 127 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றி 33 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.மெதடிஸ்த மத்திய கல்லூரியில் 98 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 42 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலயத்தில் 154 மாணவர்கள் பரீட்சைக்கு தோற்றிய நிலையில் 45 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 434 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்.

இந்நிலையில் வெளியாகியுள்ள ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையில் மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் உயர் தேசிய பாடசாலை மாணவியான சிறிசங்கர் பவினயா 198 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்து சாதனையினை படைத்துள்ளார்.

இதேவேளை புனித மிக்கேல் கல்லூரி மாணவன் வெனிஸிடன் அமில் ஷர்மின் 194 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கும் கல்வி வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளான்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கடந்த வருடத்தினை விட அதிகளவான மாணவர்கள் சித்தியடைந்துள்ளதாகவும், மட்டக்களப்பு கல்வி வலயத்தில் 93 வீதமாக மாணவர்கள் சித்தி பெற்று சாதனை படைத்துள்ளதாகவும் மட்டக்களப்பு வலய கல்வி பணிப்பாளர் சுஜாதா குலேந்திரன் தெரிவித்தார்.