நாட்டில் அமைதியை ஏற்படுத்த அரசாங்கம் கவனமாக செயற்படுகிறது -இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன்


நாட்டில் மக்கள் சுதந்திரமாகவும் சமாதானமாகவும் அமைதியாகவும் வாழவேண்டும்.நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது என இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

வடகிழக்கில் மூன்று தசாப்தகால யுத்தத்தில் மிகமோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக பின்தங்கிய கிராம பகுதிகள் இருக்கின்றன.அதனால்தான் பின்தங்கிய கிராமிய அபிவிருத்திக்கு என்னை ஒரு இராஜாங்க அமைச்சராக நியமித்திருக்கின்றார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் கிராமத்திற்கு ஒரு வீடு திட்டத்தின் கீழ் தேசிய வீடமைப்பு அதிகாரசபையினால் நிர்மாணிக்கப்பட்ட வீடு கையளிக்கும் நிகழ்வு மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புதூர் பகுதியில் நடைபெற்றது.

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளர் கே.ஜெகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளா கே.சுதர்ஸன்,மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் ஏ.அசோக் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சுமார் எட்டு இலட்சம் ரூபாவில் அமைக்கப்பட்ட இந்த வீடு சகல வசதிகளுடனும் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டது.

கடந்த அரசாங்கத்தில் அமைக்கப்பட்டு இடைநிறுத்தப்பட்டுள்ள வீட்டு திட்டங்களை முடிவுறுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்

இங்கு தொடர்;ந்து உரையாற்றி இராஜாங்க அமைச்சர்,

நடக்கக்கூடிய சாத்தியப்படக்கூடிய விடயங்களைப் பேசி மலைபோல் குவிந்து காணப்படுகின்ற எங்களுடைய மக்களின் தேவைகளை அவர்களுடைய காலடிக்குச் சென்று கேட்டறிந்து அதை நாங்கள் நிறைவேற்ற வேண்டும். மக்கள் எதிர்பார்க்கின்ற கள அரசியல் என்பது அதுவேயாகும். அவர்கள் தான் உண்மையான மக்கள் தலைவர்களாவர். அதைத்தான் நடந்து முடிந்த தேர்தல் பலருக்கு பாடம் புகட்டியிருக்கின்றது. பலர் திருந்தியிருக்கின்றார்கள். பலர் திருந்தாமலும் இருக்கின்றார்கள். அவர்களை மக்கள் திருத்துவார்கள். இப்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் அரசியலில் நாட்டம் அதிகமாக இருக்கின்றது. திருந்த வேண்டும் அல்லது அவர்கள் திருத்துவார்கள். நானும்கூடத்தான்.

கடந்தகாலத்தில் வந்த வீட்டுத் திட்டங்களில் இரண்டரை இலட்சம் ரூபாவை மக்கள் போடவேண்டியிருந்தது. அதில் சில வீடுகள் முழுமையாக அமைக்கப்படாமலிருக்கின்றது. அலரிமாளிகையில் நேற்று இராஜாங்க அமைச்சர்கள்,மாவட்ட அபிவிருத்தித் தலைவர்கள் கலந்துகொண்ட கூட்டத்தில் அது தொடர்பான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது. நிச்சயமாக அரசாங்கம் அந்த வீட்டுத்திட்ட பயனாளிகளை கைவிடாது. அவர்களுக்கான உதவித் திட்டங்களையும் மேற்கொள்ளும். 

நாட்டில் நகர்ப்புறங்களில் அடுக்குமாடி வீடுகளை கட்டுவது தொடர்பாக வீடமைப்புக்கு பொறுப்பாக இருக்கின்ற நாட்டின் பிரதமர் கௌரவ மகிந்த ராஜபக்ச அவர்கள் தற்போது தொடர்ச்சியான பேச்சுக்களையும் திட்டங்களையும் வகுத்துக்கொண்டிருக்கின்றார். அந்த அடிப்படையில் இனிவரும் காலங்களில் நகர்ப்புங்களில் அடுக்குமாடி வீடுகள் கட்டப்படும். கிராமப்புறங்களில் அவரவர் காணிகளுக்குள் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படும். 

கடந்த காலத்தில் அரசகாணிகளை எடுத்து பல்வேறு பகுதிகளில் உள்ளவர்களைக்கொண்டு ஒரே இடத்தில் குடியேற்றியதால் சில சமூகச் சிக்கல்கள் அங்கு ஏற்பட்டிருக்கின்றது. ஒருசிலர் சிக்கலானவர்களாக இருந்தால் அந்த வீட்டுத் திட்டத்தில் இருக்கின்ற எவருமே நிம்மதியாக வாழமுடியாத நிலை ஏற்படுகின்றது. 

இப்பொழுது அரசாங்கம் ஏழை மக்களிடமிருந்து ஒருசத நிதியையும் அறவிடாமல் முற்;றுமுழுதான இலவச வீட்டுத்திட்டத்தை வழங்குவதற்காக வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது. இப்பொழுது கிராமத்திற்கு ஒரு வீடு என்ற அடிப்படையில் இனி கிராமத்தில் வீடற்றவர்களுக்காக வீடு என்ற அடிப்படையில் வேலைத்திட்டங்களை ஆரம்பித்துள்ளது.

நேற்றைய தினம் இராஜாங்க அமைச்சர்களையும் மாவட்ட அபிவிருத்தித் தலைவர்களையும் அமைச்சர்களையும் வறுமை ஒழிப்புக்கு பொறுப்பாக இருக்கின்ற ஜனாதிபதி செயலணியின் தலைவர் கௌரவ பசில் ராஜபக்ச அவர்கள் அலரி மாளிகைக்கு அழைத்திருந்தார். இராஜாங்க அமைச்சர்களையும் நான்கு குழுக்களாக பிரித்திருக்கின்றார்கள். அந்த நான்கு குழுக்களிலும் அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் அடங்குவார்கள். கிராமிய கட்டமைப்பு, வாழ்வாதாரம், என்று நான்கு குழுக்களாக பிரித்திருக்கின்றார்கள். வாழ்வாதார ஊக்குவிப்பு என்ற குழுவில் உள்ளடக்கப்பட்ட ஒன்பது பேரில் நானும் ஒரு இராஜாங்க அமைச்சராக உள்ளடக்கப்பட்டிருக்கின்றேன். எங்களுக்கு மூன்று அமைச்சர்கள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றார்கள். இந்த நான்கு குழுக்களிலும் உள்ளடக்கப்பட்டிருக்கின்ற அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் வருகின்ற டிசம்பர் மாதத்திற்குள் இலங்கை முழுவதும் செல்ல வேண்டும். கூட்டங்களை நடத்தி மக்களை சந்தித்து உண்மையான பிரச்சினைகளை மாவட்ட பிரதேசசெயலக மட்ட அதிகாரிகளோடு பேசி அவற்றை எடுத்துச்சென்று அதனை தீர்ப்பதற்கான திட்டமொழிவுகளை முன்வைக்க வேண்டும். இந்த நாட்டில் வறுமையை முடிவுக்கு கொண்டுவரவேண்டும் என்பதில் அரசாங்கம் மிகக் கவனமாக இருக்கின்றது. 

அனைவருக்கும் மலசலகூடம் என்ற தொனிப்பொருளில் வருகின்ற வருடத்தில் இலங்கையில் மலசலகூடம் இல்லாத அனைவருக்கும் மலசலகூடங்களை அமைத்துக்கொடுப்பதற்கான கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றது. நேற்றைக்கு முன்தினம் ஜனாதிபதியின் தலைமையில் இடம்பெற்ற விவசாய அமைச்சிற்கான கலந்துரையாடலுக்காக அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். நானும் கலந்துகொண்டிருந்தேன்.விவசாய துறைசார்ந்து பல்வேறு மாற்றங்களை கொண்டுவருவதற்கு  வேலைத்திட்டங்களை வகுத்திருக்கின்றது.       

அனைத்து அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள்,மாவட்ட அபிவிருத்தித் தலைவர்களுக்கு ஜனாதிபதியினால் விடுக்கப்படுகின்ற பணிப்புரை அனைவரும் கிராமத்திற்கு செல்லுங்கள்,மக்களுக்கு வீடுகள், கிணறுகள், வீதிகள், மலசலகூடங்கள், மின்சாரம் எதுவுமில்லை, பாடசாலைகள் இருந்தால் போதிய பௌதீக வளங்களில்லை, ஆகவே கிராமத்திற்கு செல்லுங்கள் என்பதாகும். 

வடகிழக்கில் மூன்று தசாப்தகால யுத்தத்தில் மிகமோசமாக பாதிக்கப்பட்ட பகுதிகளாக பின்தங்கிய கிராம பகுதிகள் இருக்கின்றன.அதனால்தான் பின்தங்கிய கிராமிய அபிவிருத்திக்கு என்னை ஒரு இராஜாங்க அமைச்சராக நியமித்திருக்கின்றார்கள்.

தற்போது கொரொனா வைரசினுடைய தாக்கம் மிகமோசமாக இருந்தாலும் அதனை கட்டுப்படுத்துவதில் அரசாங்கமானது வெற்றிகண்டு வருகின்றது. யாரும் பயப்படவேண்டிய அவசியமில்லை. நாட்டின் சட்டதிட்டத்திற்கு மக்கள் கீழ்ப்படிந்து நடந்தால் சரி. அரசாங்கமானது கொரொனா வைரஸை முழுமையாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும். அதில் அரசாங்கம் மிகத்தீவிரமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. அரசாங்கத்தின் சகல துறைகளும் இந்த விடயத்தில் மிகவும் உன்னிப்பாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றார்கள். ஆகையால் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும். நாட்டில் மக்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் அரசாங்கம் மிகக் கவனமாக இருக்கின்றது. 

கடந்த வருடம் ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி முழு இலங்கையையும் உலுக்கிய பயங்கரவாத குண்டுத் தாக்குதல் எமது மட்டக்களப்பு மாவட்ட சீயோன் தேவாலயத்திலும் இடம்பெற்றது. சஹ்ரான் குழுவினுடைய இந்த பயங்கரவாத குண்டுத் தாக்குதலால் நாட்டின் சுற்றுலாத்துறையில் பாரிய பின்னடைவு ஏற்பட்டது மட்டுமல்ல பாதுகாப்புத்துறை தொடர்பில் மக்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டது. அந்த அடிப்படையில் இந்த அரசாங்கம் குண்டுத்தாக்குதலோடு சம்பந்தப்பட்;டவர்களை விசாரிப்பதோடு அது தொடர்பான விடயங்களை ஆராய்வதிலும் மிகக் கவனமாக செயற்பட்டுக்கொண்டிருக்கின்றது. பயங்கரவாத குண்டுத் தாக்குதலோடு தொடர்புபட்ட சஹ்ரான் குழுவினர் பயன்படுத்திய கார்கூட காத்தான்குடி பகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதாக அறியக்கூடியதாக இருக்கின்றது. ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறன்று வழிபாட்டில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பச்சிளங் குழந்தைகள்கூட வெடித்துச்சிதறினார்கள்.

நாட்டில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்கவேண்டுமானால் இதனுடன் தொடர்புபட்டவர்கள் எந்த தரப்பாக இருந்தாலும் எந்த பிரிவாக இருந்தாலும் என்ன செல்வாக்கில் இருந்தாலும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்பட்டு விசாரணைசெய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படவேண்டும்.

இந்த விசாரணைகளை அரசாங்கம் சரியான முறையில் பல கோணங்களிலும் முன்னெடுத்துவருகின்றது.மீண்டும் ஒரு முறை இந்த நாடு பயங்கரவாத தாக்குதலுக்குள்ளாக கூடாது.நாட்டின் பாதுகாப்பு முக்கியம்.நாட்டில் மக்கள் சுதந்திரமாகவும் சமாதானமாகவும் அமைதியாகவும் வாழவேண்டும்.நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படவேண்டும் என்பதில் அரசாங்கம் மிகவும் கவனமாக இருக்கின்றது.