பெரியகல்லாறு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் ஆரம்பம்


கிழக்கு மாகாணத்தில் மிகவும் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு, பெரியகல்லாறு, உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் நேற்று மாலை கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.

மிகவும் சக்திவாய்ந்த அற்புதங்கள் நிறைந்த ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கானது கிழக்கு மாகாணத்தின் தமிழர்களின் பாரம்பரிய விழுமியங்களுடன் நடைபெற்றுவருகின்றது.

இன்று ஆலயங்கள் ஆகமம்சார்ந்த பூஜை முறைகளுக்குள் சென்றதன் காரணமாக தமிழர்களின் ஆதிவழிபாட்டு முறைகள் தமிழர்கள் மத்தியில் இருந்து செல்லும் நிலையேற்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் பெரியகல்லாறு,உதயபுரம் அருள்மிகு ஸ்ரீ வடபத்திரகாளியம்மன் போன்ற ஆலயங்களில் இவ்வாறான திருச்சடங்குகள் மூலமாக தமிழர்களின் பாரம்பரிய வழிபாட்டு முறைகள் உயிர்ப்பிக்கப்பட்டுவருகின்றன.

நேற்று மாலை பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தில் இருந்து அம்பாள் எழுந்தருளல் செய்யப்பட்டு ஆலயத்திற்கு ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டது.

அங்கு விசேட பூஜைகள் நடைபெற்று அம்மாளின் கதவு திறத்தலுக்கான பூஜைகளும் நடைபெற்று ஆலய திருக்கதவு திறக்கப்பட்டு வருடாந்த சக்தி விழா ஆரம்பமானது.

ஆலயத்தின் பிரதமகுரு விஸ்வப்பிரம்மஸ்ரீ த.தவராஜா பூசகரினால் வருடாந்த திருச்சடங்கு நடாத்தப்படுவதுடன் ஐந்து தினங்கள் நடைபெறவுள்ள திருச்சடங்கில் நாளை ஞாயிற்றுக்கிழமை மாலை அம்பாளின் வாழைக்காய் எழுந்தருளச்செய்யும் நிகழ்வு நடைபெறும்.

நாளை திங்கட்கிழமை மாலை அம்பாளின் ஊர்காவல் திருஉலா நடைபெறவுள்ளதுடன் செவ்வாய்க்கிழமை காலை சக்தி மகா யாகமும் பிற்பகல் நோற்பு கட்டும் நிகழ்வு நடைபெற்று மாலை கடற்குளிப்பு நடைபெறும்.

புதன்கிழமை காலை அன்னையின் வருடாந்த திருச்சடங்கின் தீமதிப்பு உற்சவம் நடைபெறவுள்ளது.