கரடியன்குள மக்களின் காணியை அளக்கும் பணிகள் இடைநிறுத்தம்


மட்டக்களப்பு கரடியனாறு கரடியன்குளம் பிரதேத்தில் மக்கள் குடியிருப்புக்கள், விவசாய காணிகளை உள்ளடக்கிய காணிகளை கரடியனாறு விவசாயப் பண்ணைக்குச் சொந்தமானது என அளவீடுகளை மேற்கொள்ளும் பணிகள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரமின் தலையீட்டினால் இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு கரடியனாறு கரடியன்குளம் பிரதேசத்தில் சுமார் 60க்கும் மேற்பட்ட குடும்பங்கள் காலாகாலமாக அப்பிரதேசத்தில் விவசாயம் மற்றும் குடியிருப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அக் காணிகளுக்கான உறுதிப்பத்திரம், சுவர்ணபூமி திட்டத்தினால் வழங்கப்பட்ட பத்திரங்கள் என்பன இருக்கத்தக்கதாக, கரடியனாறு விவசாயப் பண்ணையின் அதிகாரிகளால் அக்காணிகள் விவசாயப் பண்ணைக்குரியது என்ற வகையில் நேற்றைய தினம் அளவீடுகளை மேற்கொள்ள முயற்சித்தனர்.

இவ்விடயம் தொடர்பில் அப்பிரதேச மக்கள் பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் அவர்களுடன் தொடர்பு கொண்டு தெரிவித்தமைக்கமைவாக பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் ஆகியோர் அவ்விடத்திற்கு நேரடியாக விஜயம் மேற்கொண்டு பிரதேச மக்களுடன் ஆலோசித்து, உரிய அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலாளருடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டதையடுத்து அளவீட்டு நடவடிக்கைகள் உடன் இடைநிறுத்தப்பட்டன.

இது தொடர்பில் ஓரிரு நாட்களில் அப்பிரதேச மக்களுடன் பிரதேச செயலாளர் உட்பட விவசாயப் பண்ணை அதிகாரிகள் சகிதம் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.