மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக மண் அனுமதி பத்திரம் வழங்குவதை நிறுத்துமாறு மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூகங்களின் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று(03) வருகை தந்த சுற்றுச்சூழல் அமைச்சர் மகிந்த அமரவீரவை பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுடன் சேர்ந்து சந்தித்த மட்டக்களப்பு மாவட்ட சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றிய உறுப்பினர்கள் இந்த கோரிக்கையை முன்வைத்து அமைச்சரிடம் மகஜர் ஒன்றை கையளித்துள்ளனர்.
குறித்த மகஜரில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக அளவுக்கு அதிகமான மண் அனுமதி பத்திரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள வயல் நிலங்கள், குளங்கள், விவசாய காணிகள் வீதிகள் என்பன மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்காலத்தில் நீர் நிலைகள் இல்லாமல் போய் மிகமோசமான வறட்சி ஏற்படும் அபாயம் உள்ளது.
எடுக்க எடுக்க ஊறும் பொருள் மண் அல்ல அது ஒரு இயற்கை கணிம வளம் மேலதிகமாக தேங்கும் மண்ணை அகழ்வதாக கூறி அனுமதி பத்திரம் வழங்கும் புவிச்சரிதவியல் திணைக்களம். வருமான தரும் பொருளாக மண்ணை மாற்றி பல மண் வியாபாரிகளை உருவாக்கி வருகிறது. இதனால் வளமான கணிம மணல் இல்லாமல் அழிக்கப்பட்டு எதிர்காலத்தில் விவசாயம் முற்று முழுதாக இல்லாமல் அழிந்துபோகும் அபாயம் உள்ளது.
எனவே இயற்கை வளங்களை பாதுகாக்கும் அமைச்சர் என்ற வகையில்மட்டக்களப்பு மாவட்டத்தில் புதிதாக மண் அனுமதி பத்திரம் வழங்குவதை நிறுத்துவதுடன் ஏற்கனவே வழங்கப்பட்ட மண் அனுமதி பத்திரத்தை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கூமாறு வேண்டுகோள் விடுக்கின்றோம்.
அத்துடன் மண் அகழ்வை அரச நிறுவனம் ஒன்றின் ஊடாக மேற்கொண்டு கட்டிட தேவைக்கு மட்டும் மண்ணை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மண்ணை அரசாங்கம் விற்பனை பொருளாக மாற்ற கூடாது. மண்ணுக்கான மாற்று பொருட்களை பயன்படுத்தும் திட்டங்களை அரசாங்கம் உருவாக்க வேண்டும். என்பதை அரசுக்கு வேண்டுகோளாக விடுக்கின்றோம். என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.