மட்டக்களப்பில் கதவடைப்பு -இயல்பு நிலை முற்றாக பாதிப்பு

ஒன்றிணைந்த தமிழ் கட்சிகள் விடுத்தவேண்டுகோளின் அடிப்படையில் வடகிழக்கில் இன்று காலை முதல் பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

விடுதலைப் போராட்டத்தில் இறந்தவர்களை நினைவுகூரும் உரிமையை அரசாங்கம் தடுத்தமைக்கு எதிராக நாளை இந்த ஹர்த்தால் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டுள்ளதுடன் பாடசாலைகள் இயங்குகின்ற போதிலும் மாணவர்கள் மிக வரவு குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது.

இலங்கை போக்குவரத்து சேவை பஸ்கள் சேவைகள் சேவையில் ஈடுபட்டுள்ள அதேவேளை தூர இடங்களுக்கான சேவைகளில் தனியார் பஸ்கள் ஈடுபட்டுள்ளன.எனினும் மக்கள் போக்குவரத்துச்செய்யும் அளவு குறைவான நிலையில் இருப்பதன் காரணமாக போக்குவரத்துகள் மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே நடைபெற்றன.

அலுவலகங்கள் திறக்கப்பட்டுள்ளபோதிலும் மக்கள் வருகை மிகவும் குறைவான நிலையிலேயே காணப்படுகின்றது.

குறிப்பாக மட்டக்களப்பு நகர் உட்பட பல பகுதிகளில் பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன் விசேட அதிரடிப்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

பாடசாலைகளில் மற்றும் அலுவலகங்களில் இன்று காலை புலனாய்வுத்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டதாக தெரியவருகின்றது.இன்றைய தினம் கடமைக்கு சமூகம் தந்தவர்கள் சமூகம் தராதவர்கள் தொடர்பான விபரங்கள் புலனாய்வுத்துறையினரால் சேகரிக்கப்பட்டுள்ளன.

இதேநேரம் இன்றைய தினம் முஸ்லிம் பிரதேசங்களில் வழமைபோன்று செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.