தொல்பொருள் என அடையாளப்படுத்தப்பட்ட இடத்திற்குள் நுழைய தடை

 மட்டக்களப்பு வெல்லாவெளி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேற்றுச்சேனை பகுதியில் தொல்லியல் நடவடிக்கைகளுக்கு தடையேற்படுத்துவதாக கூறி தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளர் இரா.சாணக்கியனுக்கு தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

நேற்று களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்று ஊடாக இந்த தடையுத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு  போரதீவுப்பற்று  வெல்லாவெளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட  வேத்துச்சேனை கிராமத்தில்  தொல்பொருள் பிரதேசமாக அடையாளப்படுத்துவதை எதிர்த்து கடந்த ஞாயிற்றுக்கிழமை பொதுமக்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

பௌத்த பிக்கு ஒருவர் தலைமையில் பொலிஸ் மற்றும் இராணுவத்தினரின் உதவியுடன் வந்தவர்கள் வேத்துசேனை கிராமத்தில் உள்ள புளியடி வைரவர் ஆலயம் மற்றும் விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களை  பார்வையிட்டு சென்றததையடுத்து மக்கள் இது தொடர்பில் அச்சம் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் இதனை கண்டித்தும் தமது பகுதியை தொல் பொருள் இடமாக மாற்றுவதற்கு அனுமதிக்கமாட்டோம் என்பதையும் வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அன்றைய தினம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை கலைந்துசெல்லுமாறு பொலிஸார் அறிவுறுத்தியபோதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு வேட்பாளர் சாணக்கியன் தலைமையில் பொதுமக்கள் இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த பகுதியில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதனால் பொதுமக்கள் அப்பகுதியில் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுத்து நிறுத்தாறு வெல்லாவெளி பொலிஸாரினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக களுவாஞ்சிகுடி நீதிவான் நீதிமன்றினால் இந்த தடையுத்தரவு சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.