கைபொம்மைகளாக தேர்தலில் பலர் களம் இறக்கப்பட்டுள்ளனர் -இரா.துரைரெட்னம்

மக்கள் நலன் சாராத சுயநலத்துடன் தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களின் வாக்குகளைப் பிரித்து தமிழ் பிரதிநிதிகளை பாராளுமன்றத்தில் இல்லாமலாக்குவதற்கு கைபொம்மைகளாக தேர்தலில் பலர் களம் இறக்கப்பட்டுள்ளதாக ஈ.பி.ஆர்.எல்.எப். பத்மநாபா மன்ற தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான இரா.துரைரெத்தினம்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பில் இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

சமூகப் பணியை செய்வதற்காக சமூகநலன் சார்ந்த, நேர்மையான கொள்கைகளை சமூகத்திற்கு முன் வைத்து தேர்தலில் போட்டியிடுவதென்பது ஒரு தனி மனிதனின் சுதந்திரமாகும்.இதில் மக்கள் ஜனநாக ரீதியாக வாக்களித்து மக்கள் விரும்பியவர்களை பிரதிநிதியாக வாக்களிப்பு மூலம் தெரிவு செய்து அம்மக்கள் பிரதிநிதி சமூக விசுவாசத்துடன் ஊழல் மோசடியற்ற முறையில் சேவை செய்வது பிரதிநிதிகளின் கடமையாகும்.

இம் மாவட்டத்தில் பல திறமையான நல்ல வேட்பாளர்கள் இத் தேர்தலில் களமிறக்கப்பட்டுள்ளனர். இதற்கு நேர்மாறாக மக்கள் நலன் சாராத சுயநலத்துடன் தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களின் வாக்குகளைப் பிரித்து தமிழ் பிரதிநிதிகளை பாராளுமன்றத்தில் இல்லாமலாக்குவதற்கு கைபொம்மைகளாக தேர்தலில் பலர் களம் இறக்கப்பட்டுள்ளனர். இவைமட்டுமின்றி வியாபார நோக்கத்துடனும், அரசியல் பதவிகளுக்காக தேர்தலில் போட்டியிடுவதும். இந்தப் பாராளுமன்றத் தேர்தலில் அதிகரித்து காணப்படுகின்றன. இது தமிழர்களை பலவீனப்படுத்துவதற்கான சதி முயற்சி என்பதை தமிழ் வாக்காளர்கள் மறந்து விடக் கூடாது.

இம் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் நான்கு தமிழ் பிரதிநிதித்துவம் பாதுகாக்கப் பட வேண்டும், வெற்றி பெற வேண்டும். கடந்த கால தமிழர்களின் வலிகளை உணர்ந்தவர்களாக இருக்க வேண்டும். எதிர்காலத்தில் தமிழர்கள் எதர்காலத்தில் தலைநிமிர்ந்து வாழ்க்கூடியவாறு செயற்திட்டங்களை முன் வைத்து அமுல்படுத்தக் கூடியவராக இருக்க வேண்டும். மாவட்ட நிருவாகங்களுடன் நல்ல விடயங்களுக்கு ஓத்துழைத்து தேசிய ரீதியாக இணக்கப்பாட்டுடனும் அதிகார அரசியலை பயன்படுத்தக் கூடியவாறும் சுயநலம், வியாபாரநோக்கு அற்றவராக உள்ளவர்களை கண்டு பிடித்து வாக்களித்து நான்கு தமிழ் பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டியது தமிழ் வாக்காளர்களின் கடமையாகும்.

இதை விடுத்து சுயநலனுக்காக தமிழர்களின் வாக்குகளைப் பிரிப்பதற்காக பல குழுக்களாகப் பிரிந்து பிரதிநிதிகளை இல்லாமல் செய்பவர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென அறைகூவல் விடுப்பதோடு, இதை புரிந்து கொண்டு வாக்குகளைப் பிரிப்பதற்காக துணைபோயுள்ள வேட்பாளர்களை ஓதுங்கிக் கொள்ளுமாறும் அலுவலகத்தில் நடைபெற்ற தேர்தல் தொடர்பான கூட்டத்தில் கட்சி அங்கத்தவர்களுக்கு மத்தியில் தெரிவித்துள்ளார்.