முன்னாள் போராளிக்கு வாழ்வாதாரத்திற்கு உதவிய புலம்பெயர் உறவு –முன்னுதாரண செயற்பாடு என பாராட்டு

மதமிழ் மக்களின் உரிமை போராட்டத்தில் களமாடி பல வெற்றிகள் படைத்து போராடி மடிந்த பல மாவீரர்களும், நம் மத்தியில் வாழ்ந்து வரும் பல போராளிகளையும் சதா காலமும் கண்டுகொண்டிருக்கின்றோம்.

யுத்தம் ஓய்விற்கு வந்து பல வருடங்களை கடந்துவிட்ட நிலையிலும் அந்த யுத்த வடுக்களை இன்றும் தமிழினம் சுமந்து கொண்டுதான் இருக்கின்றது.
தன் மக்களை இழந்த குடும்பங்கள் இன்று வரையும் பலர் வாழ்வதற்கு ஒரு வாழ்வாதாரமின்றியும், தங்கள் வாழ்க்கையை மறந்து போராடிய போராளிகள் இன்று வாழ்வாதாரமின்றி நிர்க்கதிக்குள்ளாகி வாழ்ந்து வருகின்றனர்.
தமிழ் மக்களின் உரிமைக்காக போராடி போராளிகளில் பலர் தமது வாழ்வாதாரங்களை இழந்து பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டுள்ள நிலையில் அவர்களுக்கு உதவும் வகையில் சில புலம்பெயர் உறவுகள் முன்வருகின்றமை பாராட்டுக்குரியது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொத்தியாபுலையினை சேர்ந்த முன்னாள் போராளியான த.வேணுதாஸ் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் வகையில் ஆடு வளர்ப்புக்கான உதவிகள் வழங்கப்பட்டன.
முன்னாள் போராளியான வேணு 2006ம் ஆண்டு விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இணைத்துக்கொள்ளப்பட்ட இவர், பின்னர் ஜெயந்தன் படையணியில் 2007ம் ஆண்டு இணைக்கப்பட்டு தளபதி ரமேஸ் தலைமையில் 1500 போராளிகளுடன் காட்டுவழியாக நடைபாதையில் வன்னி நோக்கி சென்று அங்கு 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் 25ம் திகதி தளபதி கீர்த்தி தலைமையில் இடம்பெற்ற மணலாற்று சண்டையில் குறித்த தினத்தில் விழுப்புண் அடைந்தார்.

2009ம் ஆண்டு நடைபெற்ற முள்ளிவாய்க்கால் இறுதிப்போரின் போது மக்களோடு மக்களாக சென்றபோது ஓமந்தை தொழிநுட்ப கல்லூரியில் வைத்து இராணுவத்தினரால் பிரிக்கப்பட்டு புனர்வாழ்வுக்காக தெரிவு செய்யப்பட்டு ஒன்றரை வருடங்களின் பின்னர் விடுதலைபெற்றுள்ளார்.

வாழ்வாதாரமின்றி வாழ்ந்த அவர், விழுப்புண் மத்தியிலும் சோடாக் கம்பனியில் 700 ரூபா சம்பளத்திற்கு வேலை செய்துகொண்டிருக்கும் போது விழுப்புண் அதிகரிப்பு காணமாக தொடர்ச்சியாக அவ்வேலையினை செய்ய முடியாமல் நிறுத்தியுள்ளார்.
இந்த நிலையில் இவரின் நிலைமை குறித்து ஊடகங்கள் ஊடாக வெளிக்கொணரப்பட்டதை தொடர்ந்து லண்டனில் உள்ள மட்டக்களப்பினை சேர்ந்த வசீகரன் என்பவர் இவரின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் உதவியை வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பினை சேர்ந்த கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் பயற்றுவிப்பாளர்களில் ஒருவரான சுரேஸ்குமார் ஊடாக இந்த உதவிகளை வழங்கிவைக்கப்பட்டன.


ஆடுவளர்ப்பதற்கான கொட்டகை அமைக்கப்பட்டு அதில் வளர்ப்பதற்கான ஆடுகளும் வழங்கிவைக்கப்பட்டன.
இவற்றினை முன்னாள் போராளிக்கு வழங்கிவைக்கும் நிகழ்வு ஆசிரியர் எஸ்.நமசிவாயம் தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்வில் சுரேஸ்குமார் மற்றும் கிராமிய அபிவிருத்தி சங்க தலைவர்,ஆலயங்களின் தலைவர்,கிராம சேவையாளர்,அபிவிருத்தி உத்தியோகத்தர்,விளையாட்டுக்கழகங்களின் உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது லண்டனில் வதியும் வசீகரனின் மூன்று இலட்சம் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட ஆடு வளர்ப்பு கொட்டகை மற்றும் ஆடுகள் பயனாளியிடம் வழங்கிவைக்கப்பட்டது.