மொட்டு சின்னத்திற்காக சூரியன் முகமூடியில் இறங்கும் கிழக்கு தமிழர் கூட்டமைப்பு - ஸ்ரீநேசன் MP சாடல்

வடக்கு தலைமைகளை நம்பமுடியாது எனக் கூறி கிழக்கு மக்களுக்கு என்று கிழக்கு தமிழர் கூட்டமைப்பினை உருவாக்கியவர்கள். மொட்டு சின்னத்திற்காக சூரியன் முகமூடியினை தமிழ் மக்களின் வாக்குகளை சிதறடிக்கப் போகின்றார்கள்  என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் குற்றம் சாட்டியுள்ளார்.

மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட நெடியமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையின் இல்ல விளையாட்டுப் போட்டியானது நேற்றை தினம் (2020.02.28) பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது. அந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கருத்துத் தெரிவித்தார். 

தொடர்ந்து உரையாற்றிய அவர்,

பொதுஜனப் பெரமுன அறிவித்துள்ளது தாம் வடக்கு கிழக்கில் தாங்கள் மொட்டுச் சின்னத்தில் போட்டியிடுவதில்லை என்று, அப்படியாயின் இவர்கள் தென்பகுதிகளில் பிரச்சாரம் செய்யப் போகின்றார்கள் சிறுபான்மை மக்களுடைய வாக்குகள் தமக்கு தேவையில்லை, பெரும்பான்மையினரின் வாக்குகள் தான் தேவை அதனால்தான் வடக்கு கிழக்கில் போட்டியிடவில்லை என்று ஆனால் மறைமுகமாக வடக்கு கிழக்கில் உள்ள சில்லறைக் கட்சிகளை களமிறக்கி தமிழ் மக்களின் வாக்குகளைச் சிதைவடையச் செய்து ஆசனங்களைக் கைப்பற்றும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றார்கள்.

இதற்காகவே அவசரமாக அவசரமாக ஆனந்தசங்கரி ஐயாவின் சூரியன் சின்னம் மாத வாடகைக்கு பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சூரியன் சின்னத்தினை பெற்றுக்கொண்டுள்ளவர்கள் தான் முன்பு வடக்கு தலைமைகளை நம்பமடியாது எனக் கூறி கிழக்கு தமிழர் கூட்டமைப்பினை உருவாக்கியவர்கள்.

தற்போது அதை மறந்து தமது குறுகிய அரசியல் இலாபத்திற்காக ஆனந்த சங்கரி ஐயாவிடம் சரணாகதியாகியுள்ளார்கள். இவர்கள் ஏற்கனவே மட்டக்களப்பு மாவட்ட மக்களின் வாக்குகளைப் பெறும் யோக்கியத்தினை இழந்தவர்கள். தற்போது மீண்டும் மொட்டு சின்னத்திற்காக சூரியன் முகமூடியினை அணிந்து வரப்போகின்றார்கள். இதற்குப் பின்னர் வரும் தேர்தல்களில் என்ன சின்னத்தில் வரப்போகின்றார்களோ தெரியவில்லை. இருந்தும் எமது மக்கள் இவர்களை நன்றாகவே இனங்கண்டு வைத்துள்ளார்கள். என தெரிவித்தார்.

இந் நிகழ்வில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன், முன்னாள் மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரன், பிரசன்னா இந்திரகுமார் மற்றும் கால்குடா வலயக் கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.