மட்டக்களப்பு மாநகரசபைக்கு பாதுகாப்பு அங்கிகள் வழங்கிய ஜேர்மன் தீயணைப்பு பிரிவினர்

மட்டக்களப்பு மாநகர சபை தீயணைப்பு பிரிவினருக்கு ஜேர்மன் நாட்டு தீயணைப்பு பிரிவினரால் இன்று மாலை பாதுகாப்பு அங்கிகள் வழங்கிவைக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் மேற்கொண்டுவரும் அபிவிருத்தி திட்டங்களுக்கு அமைய தீயணைப்பு பிரிவினரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு தீயணைப்பு வீரர்களுக்கான ஜேர்மன் நாட்டு தயாரிப்பான பல இலட்சம் பெறுமதிமிக்க   பாதுகாப்பு உடைகள் இன்று மாநகர சபையில் வைத்து கையளிக்கப்பட்டது.

ஜேர்மன் நாட்டின் தீயணைப்பு நிறுவக குடும்பத்துடன் மாநகர சபை ஏற்படுத்தி கொண்ட நட்புறவின் பலனாக இரண்டாவது தடவையாக இங்குள்ள தீயணைப்பு வளங்களை அதிகரிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

இதற்கமைய முதல்வர் சரவணபவன் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இன்று முதற்கட்டமாக மூன்று பாதுகாப்பு உடைகள் வழங்கப்பட்டதுடன், மொத்தமாக 26 வீரர்களுக்கான  பாதுகாப்பு உடைகளும், தீயணைப்புக்கு தேவையான வாகனம் ஒன்றும் வழங்கப்படவுள்ளன.

ஓவ்வொரு தீயணைப்பு பாதுகாப்பு உடைகளும் சுமார் ஐந்து இலட்சம் ரூபா பெறுமதியானது எனவும் இந்த உடைகளை அணிந்துகொண்டு தீயினால் பாதிக்கப்பட்ட பகுதிக்குள் சென்று தீயணைப்பு வீரர்களினால் செயற்படமுடியும் எனவும் மாநகர முதல்வர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் ஜேர்மன் நாட்டின் தீயணைப்பு நிறுவக உறுப்பினர்கள், முதல்வர் தி.சரவணபவன், ஆணையாளர் க.சித்திரவேல், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், பிரதி ஆணையாளர் உ.சிவராஜா, கணக்காளர் திருமதி ஜி.எச்.சிவராஜா, தீயணைப்பு பொறுப்பாளர் வி.பிரதீபன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் கலந்துகொண்டனர்.