நான்கரை வருடமாக என்ன சாதித்து என்று கேட்பவர்கள் பத்துவருடத்தில் சாதித்தது என்ன?-துரைராஜசிங்கம் கேள்வி

கடந்த நான்கரை வருடங்களாக ஐக்கிய தேசிய கட்சிக்கு ஆதரவு வழங்கி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதனை சாதித்துள்ளதென்று கேட்பவர்கள் இதற்கு முன்னர் பத்து, பன்னிரண்டு வருடங்கள் அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருந்து நாங்கள் சாதித்தவற்றுக்கு மேலாக எதைச் சாதித்தார்கள் என்று மக்களுக்குச் சொல்ல முடியுமா? என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான கி.துரைராசசிங்கம் தெரிவித்தார்.

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அலுவலகத்தில் இடம்பெற்ற பிரத்தியேக ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாங்கள் கடந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்துடன் ஒட்டிக் கொண்டிருந்து இணக்க அரசியலை மேற்கொள்ளவில்லை. எமது மக்கள் தொடர்பாக சிந்திக்கும் முகமாக ஏற்படுத்தப்பட்ட அரசாங்கத்துக்கு எமது மக்கள் தொடர்பாக செயற்படும் விடயத்தில் ஆதரவினை நல்கினோம். அந்த வகையில் எமது மக்களின் உரிமையுடன் கூடிய அபிவிருத்திகள் தொடர்பில் பல விடயங்களைச் செய்து காட்டியுள்ளோம்.

2015ம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்வில் நாங்கள் முக்கியமானதொரு வகிபாகத்தைக் கொண்டிருந்தோம் என்பது யாவரும் அறிந்ததே. அதன்பின்னர் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மக்கள் எமது பதினாறு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுத்தமை எமது செயற்பாட்டிற்கு அவர்கள் வழங்கிய அங்கீகாரமாகும். இதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தை ஒரு அரசியலமைப்பு சபையாக மாற்றுவதில் முக்கிய பங்களிப்பை வழங்கினோம். புதிய அரசியலமைப்பு உருவாக்கத்திற்கான பிரேரணை ஒரே மனதாக நிறைவேற்றப்பட்டது.

புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான நடவடிக்கைக்குழு மற்றும் ஆறு உபகுழுக்கள் என்பன அமைக்கப்பட்டன. இவையெல்லாம் தனித்தனியே கூடி ஆராய்ந்து உபகுழுக்களின் அறிக்கைகள், இடைக்கால அறிக்கை என்பன வெளியிடப்பட்டன. தொடர்ந்து வரைபுக்கு முதற்கட்டமான நிபுணர்குழு அறிக்கை கூட தயாரானது. புதிய அரசியலமைப்பு தொடர்பில் எமது பங்களிப்புடனான சாதனைகள் இவை.

இலங்கை தொடர்பான ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையத்தின் தீர்மானததிற்கு இலங்கை அரசை இணை அனுசரணை வழங்கி செயற்படும்படி செய்தமை

அதுமட்டுமல்ல நீண்ட காலமாக அமுலில் இருந்த அவசரகாலச்சட்டம் நீக்கப்பட்டது. மக்கள் வீதிக்கு வந்து பல்வேறு விதமான ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு தமது உரிமைகளை வலியுறுத்தக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டது. தொடர்ச்சியாக கடந்த அரசின் ஆட்சிக் காலத்தில் வடகிழக்கிற்கான பாதீட்டு ஒதுக்குத் தொகைகள் கூட்டு எதிர்க்கட்சி பொறாமைப்படும் அளவிற்கு அமைந்திருந்தன. இராணுவம் கைப்பற்றியிருந்த காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டன. 217 அரசியற் கைதிகளில் 130 பேர் விடுவிக்கப்பட்டிருக்கின்றார்கள். எமது வெளிநாட்டு உறவுகள் சுதந்திரமாக வந்து சென்றார்கள்.

அத்துடன், 2015 தொடக்கம் நடைபெற்ற ஒவ்வொரு சுதந்திரதின விழாவின் போதும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. ஜனாதிபதி வடக்கு கிழக்கிற்கு வந்த நேரங்களிலும் தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. வடமாகாணத்தில் தேசியக் கொடியேற்றும் சந்தர்ப்பங்களில் எல்லாம் தமிழிலே தேசிய கீதம் பாடப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் இத்தகு மாகாணசபை நிகழ்வுகளில் சிங்களத்திலும், தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் தினமும் காலையில் பாடப்படும் தேசிய கீதம் ஒருநாள் சிங்களத்திலும், மறுநாள் தமிழிலும் என்ற ஒழுங்கு கடைப்பிடிக்கப்பட்டு வந்தது.

அத்தோடு, வடக்கு கிழக்கில் இருந்த முன்னாள் இராணுவ அதிகாரிகளான ஆளுநர்கள் மற்றப்பட்டு குடியியல் நிருவாகிகள். மற்றும் அரசியலாளர்கள் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டார்கள். கிழக்கு மாகாணத்தில் நடைபெற்ற பாராபட்சமான நியமன நடைமுறைகள் நிறுத்தப்பட்டு மாவட்ட மற்றும் இன விகிதாசார அடிப்படையிலான நியமனங்கள் வழங்கப்பட்டன. மண் அகழ்வு போன்ற விடயங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. எமது ஒத்துழைப்போடு நிறைவேற்றப்பட்ட பத்தென்பதாம் திருத்தத்தின் காரணமாக நாடாளுமன்றத்தின் ஆதிக்கம் மேலோங்கி நின்றது. தகவல் அறியும் சட்டம் நடைமுறைக்கு வந்தது. நீதித்துறை சுதந்திரமாக இயங்கியது. அரசியல் அமைப்பு ஆணைக்குழுக்கள் சுயாதீனமாக இயங்கின. தேர்தல்கள் வெளிப்படைத்தன்மை கொண்டவையாகவும், வன்முறைகள் அற்றவையாகவும் இடம்பெற்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேய்ச்சற்தரையான மயிலத்தமடு மற்றும் மாதவணை பிரதேசத்தில் சுமார் பத்தாயிரம் ஏக்கர் நிலத்தில் வெளிமாவட்டங்களில் இருந்து மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய குடியேற்றங்கள் தடுக்கப்பட்டது. கிழக்கு மாகாணத்தில் சாதாரண ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமான குறிப்படத்தக்க பல அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்றன. இன்னும் இன்னும் பல விடயங்கள் உள்ளன எனத் தெரிவித்தார்..