ஆரம்ப பாடசாலையின் வெற்றியும், தோல்வியும் முன்பாடசாலை கல்வி நிலையங்களிலே தங்கியுள்ளது.



முன்பள்ளிக் கல்வியின் முக்கியத்துவம்

ஒரு குழந்தையின் வளர்ச்சியில் இரண்டு  முதல் ஐந்து வரையான மழலைப் பருவம் முக்கியமானது எனலாம்.

அப்பருவத்தில் குழந்தைக்கு கிடைக்கும்  அனுபவங்களே அவர்களின் பிற்கால வாழ்க்கைக்கு ஊன்றுகோலாக அமைகின்றது எனக் கூறினால் மிகையாகாது.

அந்த அடிப்படையிலே உகந்த அனுபவக் கல்வியினை பிள்ளைக்கு வழங்குவதில் முன்பள்ளிக் கல்வி முக்கியத்துவம் பெறுகின்றது.

அந்த வகையில் முன்பள்ளிக் கல்வி எனும் போது பிள்ளைகள் பாடசாலைக்குச் சென்று ஆரம்பக் கல்வியைத் தொடங்கும் நிலைக்கு முன்னராகப் பெறுகின்ற நிறுவன ரீதியான செயற்பாட்டினை முன்பள்ளிக் கல்வி எனக் குறிப்பிடலாம்.

 அதாவது 3-5 வயது வரை வீட்டுக்கு வெளியே வழங்குகின்ற ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வியை முன்பள்ளிக் கல்வியை முன்பள்ளிக் கல்வி என அழைக்கின்றோம்.

முன்பள்ளிக் கல்வி என்பது “ஒரு குழந்தை ஆரம்பக் கல்வியை பெறுவதற்கான சிறந்த இடமாகும்” என றவேர்ஸ் குறிப்பிடுகின்றார்.

அதாவது முன்பள்ளிக் கல்வியில் ஏற்படும் அனுபவம்தான் அப்பிள்ளையின் பிந்திய ஆர்வத்திற்கு அல்லது கற்றல் மீதான வெறுப்பிற்கு வழியமைத்துக் கொடுக்கின்றது.

 எனவே முன்பள்ளிக் கல்வியானது பிள்ளையின் சுயசிந்தணை, சுய ஆற்றல், சுய ஆர்வம் போன்றவற்றிற்கு வழியமைத்துக் கொடுக்கின்றது.
“எதிர்காலக் கற்றலுக்காகக் கற்றல்” எனும் குறிக்கோளினை நிறைவேற்றும் பருவம் முன்பள்ளிப் பருவமாகும்.

அதாவது முன்பள்ளிகள் ஆரோக்கியமும்,  மகிழ்ச்சியும் நிறைந்த சூழலும் வழங்குவதோடு பின்னர் அதன் கற்றலுக்கும் உடல் உள மனவெழுச்சி விருத்திக்கும் அடித்தளமாகக் விளங்கக் கூடிய பயனுள்ள அனுபவங்களை வழங்குகின்றது.


6 வயதிற்கு முன்னைய கற்றல் அனுபவங்கள் குழந்தையின் விருத்தியில் உருவாக்க காலமாகும். இப்பருவத்தில் இடம் பெறும் கற்றல் வெற்றிகரமாக அமையும் போது அது பாடசாலையின் உயர்மட்ட அடைவுக்கு ஒரு முன் மாதிரியாக அமையும் எனலாம்.

பாலர் பள்ளி சிறுவர்கள் ஒழுங்குபடுத்தப் படாதவர்களாகவும் நோக்கமின்றி அலையும் பாங்கினராகவும் இருப்பர். அவர்களை ஒழுங்குபடுத்தி நோக்கத்தை எய்தக் கூடியவர்களாக மாற்றும் செயற்பாட்டினை முன்பள்ளிக் கல்வி தொடங்கி வைக்கவே ஆரம்ப கல்வி வளர்த்துச் செல்கின்றது எனலாம்.

முன் பள்ளிக் கல்வி செயற்பாடுகள் அமைதியானதும், உறுதியானதும் உயிர்துடிப்புள்ளதுமான விளையாட்டு அனுபவங்களைக் கொண்டு பிள்ளையின் தசைநார் நுண்ணியக்க, பேரியக்க அபிவிருத்திக்கு வலுவுட்டும் உந்து சக்தியாக அமைதல் வேண்டும். அப்போதுதான் ஆரம்பக் கல்வியைப் பெறக் கூடிய மனோதைரியம் அப்பிள்ளையின் மனதில் பதிய ஆரம்பிக்கும்.

அத்தோடு சுதந்திர சிந்தனை, சுயகட்டுப்பாடு,ஒழுக்கம், ஒத்துழைப்பு, மற்றவர்களை ஏற்றுக் கொள்ளும் மனப்பாங்கு போன்றவற்றை பிள்ளையிடம் வெளிப்படுத்தவும் வலியுறுத்தவும் முன் பாடசாலை வகுப்புகளை தவிர வேறு பொருத்தமான இடம் இல்லை என்றே கூறலாம்.

3-5 வயதிற்குட்பட்ட வருடங்கள் பிள்ளையின் விருத்தியில் முக்கியமானவை. இப்பருவத்திலே ஆரம்ப சமூகமயமாக்கல் தொடங்குகின்றது.

பிற குழந்தைகளுடன் கலந்து பழகக் கிடைக்கும் சந்தர்ப்பங்கள் பிள்ளையின் ஆளுமையை வளர்க்க உதவுவதோடு அவர்களது சமூகத் திறனை மேம்படுத்தவும் உதவுகின்றது.

5 வயதிற்குட்டபட்ட காலத்தில்தான் பிள்ளையின் உடல் உள வளர்ச்சிகள் பெரிதும் இடம் பெறுகின்றது. ஒரு சிறு பிள்ளை ஆரம்பத்தில் கற்றுக் கொண்டதையே அது வளர்ந்த பின்பும் பிரதிபலிக்கச் செய்கின்றது என சிக்மன் புரோய்ட் கூறுகின்றார்.

அந்த வகையில் 6 வயதிற்கு முன்னராக ஏற்படுகின்ற கற்றல் அனுபவங்கள் ஆரம்ப கல்வியில் மிக்க பயனுள்ளதாக அமைகின்றது.

முன் பள்ளிக் கல்வி ஏற்பாடுகள் பிள்ளையில் உள்ளார்ந்த ஆற்றலில் முழுமையான வளர்ச்சிக்கும் வாழ்க்கை நீடித்த கல்விக்கும் தேவையான அத்திவாரத்தை இடுகின்றன.

பிற்காலத்தில் உருவாகும் சிறந்த உளப்பாங்குகள்  கற்றலை விரும்பும் மன நிலை என்பன உருவாக இக் காலத்தில் ஏற்படும் வளர்ச்சி முக்கியமானது என கொழும்புப் பல்கலைக் கழக கல்வியற் துறை பேராசிரியர் சோ.சந்நிரசேகரம் அவர்கள் குறிப்பிடுகின்றார்.

பாலர் பாடசாலையின் முக்கிய நோக்கம் அடுத்த வருடம் முதலாம் ஆண்டிற்கு அனுமதிக்கப்படும்  சிறார்கள் அச்சமின்றி கூச்சமின்றி ஏனைய மாணவர்களோடு கூட்டாக பழகவும், நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக் கொடுக்கும் ஒரு இடமாகவும் முன்பள்ளி  விளங்குகின்றது.

அத்தோடு மாணவரின் மொழி, அளவு, தரம், அமைப்பு என்பன செம்மைப்படுத்தப்பட்டு செவிமடுத்தல், பேசுதல், வாசிப்பு, எழுத்து என்ற திறன்களினூடாக வளர்க்கப்படுவதற்கும் முன்பள்ளி கல்வி காலமே சிறந்ததாக அமைகின்றது.

ஆரம்ப பாடசாலையின் வெற்றியும், தோல்வியும் பிள்ளை சென்று கற்கின்ற முன்பாடசாலை கல்வி நிலையங்களிலே தங்கியுள்ளது.

இன்று சில முன்பள்ளி கல்வி நிலையங்கள் வருமான நோக்கினை மட்டும் அடிப்படையாகக் கொண்டு பிள்ளைகளை கையாள்வதற்கான பயிற்சிகளோ பாடத்திட்டங்களோ இன்றியும்  செயற்பட்டு வருகின்றன.

 இதனால் பிள்ளையின் ஆக்கத்திறன் மழுங்கடிக்கப்படுகின்றது. இது இன்றைய காலகட்டத்தில் முன்பள்ளிக் கல்வியினை பெறுவதற்கான சவாலாக காணப்படுகின்றது.

ஆகையினால் ஒவ்வொரு பெற்றோரும் தமது பிள்ளைக்கான முன்பள்ளிகளை தெரிவு செய்யும் போது மிகவும் பொருத்தமான சிறந்த கல்வி நிலையங்களை தெரிவு செய்ய வேண்டும்.
 வளப்பற்றாக்குறையுடன் அமைந்த முன்பள்ளி கல்வி மாணவனின் எதிர்காலத்தையே சூனியமாக்கிவிடும் இதனால் நேரடியான கண்காணிப்பும், பார்வையும் பெற்றோருக்கு அவசியமாகின்றது.

குழந்தைகளே நாட்டின் எதிர்கால உயர்வை நிர்மாணிப்பவர்கள். குழந்தைகளின் விருத்தியின் மிகமுக்கியமான பகுதி முன்பள்ளிக் கல்வி காலத்திலே ஆரம்பித்து அதன் பின்னரான கல்வியிலும் செல்வாக்கு செலுத்தி பூரணமான ஆளுமையுடை பிள்ளைகளையும் எதிர்காலத்திற்கு பொருத்தமான சந்ததியினரையும் உருவாக்குவதில் பெரும் தாக்கம் செலுத்துகின்றது.

ஆக்கம்
               இராசநாயகம் நிலோஜனா,
                2ஆம் வருட சிறப்புக் கற்கை,
               கல்வி பிள்ளை நலத்துறை,
                கிழக்குப் பல்கலைக்கழகம்,
                            வந்தாறுமுலை.