தேர்தலுக்கான மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர்களை அறிவித்தது டெலோ

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் தேர்தலில் போட்டியிடவுள்ளவர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர்.

இன்று காலை மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயற்குழு கூட்டத்திலேயே இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் இந்த கூட்டம் மட்டக்களப்பில் உள்ள கட்சி தலைமையகத்தில் ஆரம்பமானது.

இந்த கூட்டத்தில் கட்சியின் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபையின் பிரதி தவிசாளருமான பிரசன்னா இந்திரகுமார்,முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள்,உள்ளுராட்சிமன்ற பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.

எதிர்வரும் காலத்தில் பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அவற்றினை எதிர்கொள்ளுதல்,கட்சியின் வேட்பாளர்களை அறிவித்தல் உட்பட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து இங்கு ஆராயப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் எட்டு வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் சார்பில் இரண்டு உறுப்பினர்கள் களமிறங்கவுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து தேர்தலில் போட்டியிடவுள்ள இரண்டு வேட்பாளர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் இளைஞர் அணி தலைவரும் சட்டத்தரணியுமான என்.கமலதாஸ் ஆகியோரின் பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.