மாணவர்களின் கல்வி அபிவிருத்திக்காக இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கஷ்ட, அதிகஷ்டப் பிரதேச மாணவர்களின் கல்வி அபிவிருத்தியினையும், அவர்களின் கற்றலின் மீதான ஆர்வத்தினையும் அதிகரிக்கும் நோக்கில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன.

இதன்படி இன்று (17.01.2020) ஏறாவூர் பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி பிரதேச மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் வழங்கி வைத்தார்.  

சவுக்கடி பலநோக்கு கட்டிடத் தொகுதியில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வாலிபர் முன்னனியின் தலைவர் கி.சேயோன், மட்டக்களப்பு மாநகர சபை உறுப்பினர் துரைசிங்கம் மதன், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மகளீர் அணியின் அங்கத்தவர் கந்தையா கலைவானி மற்றும் சவுக்கடி கிராம அபிவிருத்திச் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்து கொண்டு மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்.