கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் தாக்கப்பட்டாரா?-மறுக்கின்றனர் உறுப்பினர்கள்

மட்டக்களப்பு மண்முனை பற்று பிரதேசசபையின் தவிசாளரை ஐக்கிய தேசிய கட்சி பிரதேசசபை உறுப்பினர்கள் தாக்கமுற்பட்டது தொடர்பில் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

மண்முனைப்பற்றின் 22வது அமர்வு இன்று காலை நடைபெற்றவேளையில் சபையில் உறுப்பினர்கள் சபை ஒழுங்கு விதிகளுக்கு மாறாக நடந்துகொண்டதனால் சபையினை ஒத்திவைத்து வெளியேற முற்பட்டபோது தம்மீது தாக்குதல் நடாத்த முயற்சிக்கப்பட்டதாக மண்முனைப்பற்று தவிசாளர் எஸ்.மகேந்திரலிங்கம் தெரிவித்தார்.

ஆரையம்பதி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள தவிசாளிடம் காத்தான்குடி பொலிஸார் வாக்குமூலங்களை பதிவுசெய்தனர்.

தான் வெளியேறியபோது ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் இருவர் தன்னை வெளியேறவிடாமல் தடுத்து தனது கையினை அழுத்தியதாக தவிசாளர் தெரிவித்தார்.

எனினும் இன்று காலை அமர்வு ஆரம்பமான நிலையில் தங்களுக்கு இருந்த நியாயமான கேள்விகளை கேட்டபோது அதற்கு பொறுப்புக்கூறவேண்டிய தவிசாளர் பிரதேசசபைகளின் சம்பிரதாயங்களை மீறி வெளியேறிச்சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்களான த.தயானந்தன்,கே.டினேஷ்குமார் ஆகியோர் தெரிவித்தனர்.

தாங்கள் தவிசாளர் மீது எந்த தாக்குதல் முயற்சியையும் மேற்கொள்ளவில்லையெனவும் வீண்பழியை தம்மீது சுமத்துவதாகவும் இன்றைய பிரதேசசபை அமர்வில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் அதற்கு சாட்சி பகிர்வார்கள் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் முன்னெடுத்துவருகின்றனர்.