சட்டவிரோத மண் அகழ்விற்கு எதிராக சித்தாண்டியில் ஒன்று திரண்ட மக்கள்

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று (செங்கலடி) பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட சித்தாண்டி, சந்தணமடுப் பிரதேசத்தில் சட்ட விரோத மண் அகழ்விற்கு எதிராக பொதுமக்களால் கண்டனப் போராட்டமொன்று (17.12.2019) இன்று முன்னெடுக்கப்பட்டது.

"நிறுத்து நிறுத்து மண் அகழ்வை நிறுத்து", "அதிகாரிகளே துணை போகாதீர்கள்", "வீதியைச் செப்பனிட்டுத் தா” “மண் கொள்ளையர்களைக் கைது செய்”, "எமது வளத்தைச் சூரையாடாதே” போன்ற வாசகங்கள் அடங்கிய பதாதைகளை  ஏந்தியிருந்தவாறு ஆர்ப்பாட்டகாரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சந்தனமடுப் பிரதேசத்தில் சட்ட விரோதமாக மண் அகழ்வினை மேற்கொண்டு வருவதால் பாதைகள் சேதமடைவதுடன், மழை காலங்களில் குடியிருப்புப் பகுதிகளுக்குள் வெள்ள நீர் வருவதுடன், பெரும்பாலான விவசாய நிலங்களும் பாதிக்கப்படுவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர் தெரிவித்தனர். 

2015ஆம் ஆண்டு செங்கலடி பிரதேச செயலகத்தினால் இது தொடர்பாக விசேட கூட்டம் நடாத்தப்பட்டு அப்பிரதேசத்தில் இனி மண் அகழ்வினை மேற்கொள்ள முடியாது என கண்டிப்பான உத்தரவு வழங்கப்பட்டிருந்தும் அதனையும் மீறி மீண்டும் மீண்டும் மண் அகழ்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் விசனம் தெரிவித்தனர்.

குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு விஜயம் செய்த பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன் மற்றும் மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நவஜீவரஞ்சினி முகுந்தன், செங்கலடி பிரதேச செயலாளர் வில்வரெட்ணம் ஆகியோர் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடியதுடன், மேற்படி மண் அகழ்வு பிரச்சனை தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுப்பதாகவும் உறுதியளித்தனர். 

இதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தினை முடிவுக்குக் கொண்டு வந்ததுடன் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் முரளிதரன் மற்றும் பொது மக்களால் இது தொடர்பில் மகஜர்களும் கையளிக்கப்பட்டன.