சுனாமி நினைவுகள் : பல உயிர்களைக் காப்பாற்றிய சீலாமுனையைச் சேர்ந்த ரவி எனும் த.நகுலேஸ்வரன்து.கௌரீஸ்வரன்

ஆழிப்பேரலை அனர்த்தம் நடைபெற்று பதினைந்து வருடங்களாகி விட்டன. ஆயிரமாயிரம் மனித உயிர்களைக் காவுகொண்ட இந்த அனர்த்தம் ஏற்படுத்திய தாக்கங்கள் பல. ஆழிப்பேரலை அனர்த்தம் நடைபெற்ற போது தம்முயிரைப் பணயம் வைத்து பல மனித உயிர்களைக் காப்பாற்றிய மகத்தான மனிதர்கள் பலரைப்பற்றி அறிந்துள்ளோம். அத்தகைய மனிதர்களுள் ஒருவரே மட்டக்களப்பு சீலாமுனையைச் சேர்ந்த ரவி என அழைக்கப்படும் நகுலேஸ்வரன் அவர்களாவார்.
சீலாமுனைக்கு நேராக கடலோரத்தில் உள்ள நாவலடி எனும் ஊரை சுனாமி மூழ்கடித்து வாவியுள் உட்புகுந்த வேளையில் தனது இயந்திரப்படகில் வாவியுள் நின்றிருந்த ரவி அவர்கள் தனது கடலோடும் அனுபவத்தினூடாக சுனாமி அலையினை மதிநுட்பமாக எதிர்கொண்டு சுனாமியில் அகப்பட்டு வாவியுள் மூழ்கித் தத்தளித்துக் கொண்டிருந்த நாவலடியினைச் சேர்ந்த பல மனிதர்களைக் காப்பாற்றிக் கரை சேர்த்திருந்தார். 

அவ்வேளை இவருடைய துணிச்சலான செயற்பாட்டை அவதானித்த மட்டக்களப்பு பெரிய உப்போடை பொலிஸ் காவலரணின்; கோபுரத்தில் நின்றிருந்த பொலிசாரும் இவருடன் இணைந்து பல மனிதர்களைக் காப்பாற்றினர். 
சுனாமியில் அள்ளுண்டு வந்த பொருட்களுடன் மோதுண்டு இவரின் இயந்திரப்படகு சேதமுற்றதால் மேலும் பலரைக் காப்பாற்ற முடியாது போனதாக இவர் ஆதங்கப்படுவார்.

திரு ரவி அவர்கள் சீலாமுனையில் பிறந்து வாழ்பவர். சிறுவயதிலிருந்தே தென்பகுதி சிங்கள மீனவர்களுடன் (வாடியமைத்து தொழில் செய்த காலத்தில்) ஆழ்கடல் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்ட இவர் சிறந்த கடற்தொழில் வல்லுனராவார். தனது இளமைக் காலத்தில் சீலாமுனை யங்ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் கால்பந்தாட்ட வீரனாகவும் களமாடியவர்.
 
ஆழ்கடல் தொழிலில் தனக்கிருக்கும் அனுபவங்களும் அறிவுமே சுனாமி வந்த போது அப்பேரலைகளை எதிர்கொண்டு அதிலிருந்து தப்பிக்கவும் தன்னாலான அளவு, வாவியுள் அகப்பட்டு தத்தளித்த உயிர்களைக் காப்பாற்றவும் துணைபுரிந்துள்ளதாக பத்திரிகையாளருடனான நேர்காணல் ஒன்றில் இவர் கூறியுள்ளார்.

இத்தகைய துணிச்சல் நிறைந்த திரு த.நகுலேஸ்வரனுக்கு நமது மாண்பும் மரியாதையும் உரித்தாகும்.