நிலையான அபிவிருத்தி இடம்பெறவேண்டுமானால் இனப்பிரச்சினை தீர்க்கப்படவேண்டும் -சிறிநேசன் எம்.பி

ஜனாதிபதி நினைப்பது போன்று அபிவிருத்தியை மாத்திரம் செய்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்பது ஒரு தவறான கருத்தாகும். நிலையான அபிவிருத்தி இடம்பெறவேண்டுமாயின் புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

மட்டு.ஊடக அமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அவர்கள் சிறுபான்மை மக்களின் வாக்குகளைப் பெறாமல் வெற்றி பெற்றவர் என்ற கருத்து ஒன்று காணப்படுகின்றது. அது முற்றிலும் ஏற்றுக் கொள்ள முடியாத கருத்து. ஏனெனில் அவர் பெரும்பான்மை மக்களின் கணிசமான வாக்குகளைப் பெற்று கொண்டாலும் சிறுபான்மை மக்களின் 7 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதன் மூலம் தான் 52 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றார். எனவே சிறுபான்மை வாக்குகளை முற்றாகப் பெறாமல் வெற்றி பெற்றார் என்று சொல்ல முடியாது. அவேளை சிறுபான்மை மக்களின் அவ்வாக்குகள் இல்லாமல் இருந்திருந்தால் அவர் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்க முடியாது. அதேவேளை அந்த சிறுபான்மை வாக்குகள் மறுபக்கம் சென்றிருந்தால் அவர் தோல்வியடைந்திருக்கின்ற நிலைமையும் ஏற்பட்டிருக்கும். எனவே பெரும்பான்மை மக்களின் வாக்குகளால் மாத்திரம் ஜனாதிபதியாகினார் என்ற கருத்து ஏற்றுக் கொள்ள முடியாது.

எவ்வாறு இருப்பினும் அனைத்து மக்களுக்குமான செயற்பாடுகளை அவர் முன்னெடுப்பதாகக் குறிப்பிட்டிருக்கின்றார் அதனைப் பாராட்டுகின்றோம். அதேவேளை புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய ஆளுமையுள்ள தலைவர்கள்தான் இந்த நாட்டில் நிலைத்து நிற்கக் கூடிய சாதனை படைப்பார்கள். உலகம் போற்றுகின்ற தலைவர்களின் வரிசையில் இவர் இருக்க வேண்டுமாக இருந்தால் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளுக்கு நீடித்து நிலைத்திருக்கக் கூடிய நியாயமான தீர்வினை வழங்க வேண்டும். அவ்வாறில்லாவிடின் அவர் ஏற்கனவே இருக்கக்கூடிய ஜனாதிபதிகளின் வரிசையில் ஒருவராகத் தான் கருதப்படுவாரே தவிர மக்கள் மத்தியில நிலைத்திருக்கக்கூடிய ஜனாதிபதியாகத் திகழ மாட்டார்.

எந்தவொரு ஜனாதிபதியாக இருந்தாலும் மக்களுக்கு நன்மை பயக்கும் நல்ல விடயங்களை மேற்கொள்வார்களாக இருந்தால் அதனை வரவேற்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், தமிழ் மக்களும் தயாராக இருக்கின்றார்கள். வரிக்குறைப்பு, பாதுகாப்பு ஆளணி குறைப்பு, வாகனத் தொடரணி குறைப்பு போன்ற விடயங்கள் நல்ல விடயங்களாக ஏற்றுக் கொள்கின்றோம். இவை சாதாரண சிறிய விடயங்களாகக் காணப்படுகின்றன. ஆனால் இதனை விட பாரிய விடயங்கள் எமது நாட்டில் நிலவுகின்றது. அவற்றுக்குத் தீர்வு காணும் போதுதான் உள்நாட்டிலும். வெளிநாட்லும் இருக்கக்கூடிய பல்லின மக்கள் மத்தியில் ஒரு நன்மதிப்பைப் பெற முடியும்.

அந்தவகையில் எமது நாட்டில் முக்கிய பிரச்சினைகளாக இருக்கின்ற விடயங்களாவன அவருக்குத் தெரியும். தெரியாத விடயங்கள் என்று ஒன்றும் இல்லை. இனப்பிரச்சினைக்கான தீர்வு, காணாமல் ஆக்கப்பட்ட மக்களுக்கான நியாயமான தீர்வு, அரசியற் கைதிகளின் விடுதலை, கல்முனை வடக்குப் பிரதேச செயலகம் உட்பட்ட நிருவாக அலகுகள் தொடர்பான விடயங்கள், பொருளாதார விடயங்கள் போன்ற முக்கிய விடயங்கள் இருக்கின்றன.

அத்துடன் நாட்டின் தலைவர் என்ற வகையில் அனைத்து மக்களுக்கும் சமத்துவம், சமவாய்ப்புக் கொடுக்கக்கூடிய தலைவராக அவர் திகழ வேண்டும். மாறாக சிங்கள பௌத்த மக்களின் வாக்குகளின் மூலம் தான் தெரிவுசெய்யப்பட்டேன் என்று அதனை முதன்மைப் படுத்தி அவர் செயற்படுவாகராக இருந்தால் சிறுபான்மை மக்களுக்குரிய தலைமைத்தவத்தினை வழங்கத் தவிறிவிட்டார் என்ற குற்றச்சாட்டு எதிர்காலத்தில் அவருக்கும் இருக்கும்.

ஜனநாயகத் தன்மையான ஆட்சி இந்த நாட்டில் இருக்க வேண்டும். ஊடக சுதந்திரம், அடிப்படை உரிமைகள், மனித உரிமைகளைப் பாதுகாத்தல், பயம் பீதி இல்லாமல் நடமாடக்கூடிய சுதந்திரம் போன்றவை இருக்க வேண்டும்.

அத்துடன் பதின்மூன்றாவது திருத்தத்தையும் கடந்து இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. அத்தோடு ஜனாதிபதிக்கு இருக்கின்ற சர்வாதிகார அதிகாரங்கள் பலவற்றைக் குறைத்தது மாத்திரமல்லாமல், பாராளுமன்றத்திற்குரிய அதிகாரங்களை அதிகரித்துக் கொடுத்தது 19வது திருத்தம். தனிமனித அதிகாரத்தைக் குறைத்து பாராளுமன்ற ஜனநாயகத்தின் பண்புகளை மேலோங்கக் கூடிய விதத்தில் இருக்கும் இந்தப் 19வது திருத்தத்தை மேலும் வலுப்படுத்த வேண்டுமே தவிர அதனை வலுவிலக்கச் செய்யக் கூடிய செயற்பாடுகளை மேற்கொள்வாராயின் அது பழைய பல்லவிக்கே இட்டுச் செல்லும் சூழலை உருவாக்கும்.

இந்த அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்டவுடனே மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. கடந்த கால நிலைமைகள் மீண்டும் ஏற்படுமோ என்று. இன்றும் ஊடகவியலாளர்கள் விசாரணைக்கு அழைக்கப்படுகின்றமை உட்பட அண்மையில் சுவிஸ் தூதரகப் பணியாளரின் கடத்தல் விடயம் போன்ற விடயங்களும் மக்கள் மத்தியில் பேசப்படுகின்றது. இன்றைய சூழலில் ஜனநாயகத்தைப் பலப்படுத்தக் கூடிய ஒரு சூழ்நிலை இருக்க வேண்டும். சட்டத்தின் முன் ஆளுகின்றவர்களும், ஆளப்படுகின்றவர்களும் சமமாகக் கருதப்பட வேண்டும். அனைவரின் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஜனநாயகம் மற்றும் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்படுகின்ற அதேவேளை ஊடகவியலாளர்கள் சுதந்திரமாகவும், சுயாதீனமாகவும், பக்கச்சார்பில்லாமலும் பணியாற்றக் கூடிய சூழ்நிலையை உருவாக்க வேண்டும்.

ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது 13வது திருத்தம் பற்றியே இந்தியா சொல்லியிருக்கின்றது. இது ஒரு முழுமையான தீர்வு இல்லாது விட்டாலும் கூட அதனை நடைமுறைப்படுத்த வேண்டும் என்கின்ற விடயத்தில் காணி, பொலிஸ் அதிகரங்கள் அதில் மிக முக்கியமாக இருக்கின்றன. அத்துடன் நிதி அதிகாரங்கள் குறைவாக இருக்கின்றமை, ஆளுநரின் அதிகாரம் முதலமைச்சரின் அதிகாரத்தை விட உயர்ந்து காணப்படுகின்ற நிலை போன்றவை காணப்படுகின்றன. இவ்வாறான நிலைமைகளைத் தவிர்த்து முழுமையான அதிகாரப் பகிர்வினை வழங்குகின்ற போதுதான் அது சாத்தியப்படுமே தவிர நடைமுறைச்சாத்தியமற்ற விடயம் என்று ஜனாதிபதி 13வது திருத்தத்தைக் கருதுவது என்பது தமிழ் மக்கள் அவர் மீது மேலும் நம்பிக்கையை இழக்கச் செய்யும் செயற்பாட்டுக்கு அவர் செல்லுகின்றாரோ என்றே சிந்திக்கத் தோன்றுகின்றது.

ஜனாதிபதி இந்தியாவிற்குச் செல்லுகின்ற போது அரசியல் தீர்வுக்கான இணக்கப்பாட்டினை ஜனாதிபதி மேற்கொள்வார் என்று தமிழ் மக்கள் எதிர்பார்த்தார்கள். அது எதிர்காலத்தில் எந்தளவுக்கு முன்னெடுக்கப்படும் என்பது இனிவரும் காலத்தில் தான் தெரியும். ஜனாதிபதி நினைப்பது போன்று அபிவிருத்தியை மாத்திரம் செய்துவிட்டால் இனப்பிரச்சினை தீர்ந்துவிடும் என்பது ஒரு தவறான கருத்தாகும். நிலையான அபிவிருத்தி இடம்பெறவேண்டுமாயின் புறையோடிப்போயுள்ள இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.