மட்டக்களப்பில் காற்றுடன் கூடிய மழையினால் முறிந்து வீழ்ந்த மரங்களால் சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று பகல் வீசிய கடும் காற்று காரணமாக மட்டக்களப்பு நகர் மற்றும் தேற்றாத்தீவு ஆகிய பகுதிகளில் மரங்கள் முறிந்து வீழ்ந்ததன் காரணமாக போக்குவரத்துகள் தடைக்கப்பட்டதுடன் பாடசாலையொன்றும் சேதமாகியுள்ளது.

கடும் காற்றுடன் கூடிய மழை காரணமாக மட்டக்களப்பு,பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு சிவகலை வித்தியாலயத்தில் இருந்த வேப்பை மரம் முறிந்துவீழ்ந்ததில் பாடசாலைக்கட்டிடம் ஒன்று சேதமடைந்துள்ளது.

பாடசாலை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் இல்லாத காரணத்தினால் எந்தவித உயிர்ப்பாதிப்பும் ஏற்படவில்லை.

எனினும் பாடசாலை கட்டிடம் சேதமடைந்துள்ளதுடன் பாடசாலை கட்டிடத்திற்குள் இருந்த கற்றல் உபகரணங்களும் சேதமடைந்துள்ளது.

இதேபோன்று இன்று மட்டக்களப்பு நகரில் சின்னஆஸ்பத்திரிக்கு அருகில் இருந்த மரம் வீழ்ந்ததன் காரணமாக மட்டக்களப்பு நகர் ஊடான போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையிலான குழுவினர் உடடினயாக ஸ்தலத்திற்கு விரைந்து மேற்கொண்ட நடவடிக்கை காரணமாக மரம் உடனடியாக அங்கிருந்து அகற்றப்பட்டது.