கிழக்கில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்கள் காப்பகம் எதிர்காலத்தில் அமைக்கப்படும்

வடக்கில் உள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் ‘உயிரிழை’ போன்று கிழக்கிலும் அங்கு பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்படும் என இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியனம் தெரிவித்தார்.

வட கிழக்கில் 204 முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டுள்ளோர் உள்ளனர். இவர்களின் முல்லைத்தீவு மாங்குளத்தில் உள்ள  அலுவலத்திற்கு இராசமாணிக்கம் மக்கள் அமைபின் தவிசாளர் இரா.சாணக்கியன் சென்று பார்வையிட்டதுடன் அவர்களின் நலன் செயற்பாட்டிற்காக ஒருதொகை நிதியுதவியையும் வழங்கி வைத்ததுடன் அங்கு தங்கியிருந்து சிகிச்சை பெறும் பயனாளிகளையும் சந்தித்து கலந்துரையாடினார்.

அங்கு போராலும், விபத்துக்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் வட கிழக்கில் 204 பேர் உள்ளதாக உயிரிழை அமைப்பின் தலைவர் சிறிகரன் தெரிவித்தார். அதில் பத்து பேர் தங்களின் உயிரிழை முகாமில் இருப்பதாகவும் ஏனையோர்கள் தங்களின் வீட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார். அங்குள்ளவர்களுடன் கலந்துரையாடும் போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.

"1991,  1994 ஆண்டு காலப்பகுதியில் தமிழ் மக்களுக்காக போராடி விழுப்புண் அடைந்து இளைமையிலே தங்கள்  வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் தான் நாங்கள். 1991ம் ஆண்டு முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டபோதும் நாங்கள் 2009 முள்ளிவாய்க்காலை கடக்கும் போதுதான் அதன் வலியை உணர்ந்தோம் என நெஞ்சுருக கூறிய வார்த்தைகள் அனைவரையும் ஒருகணம் நிலைகுலைய செய்தது. அதுமட்டுமல்லாமல் தங்கள் கடமைகளை தாங்களாகவே செய்துகொண்டிருகின்றனர்.  அதற்கேற்றால் போல் கட்டமைக்கப்பட்டுள்ளது.

இதன் போது இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தவிசாளர் இரா.சாணக்கியன் கருத்து தெரிவிக்கையில்,

தமிழினத்துக்காக போராடி தங்கள் வாழ்க்க்கையை இழந்தவர்கள் உண்மையிலே போற்றப்பட வேண்டியவர்கள். தங்களது உயிரை துச்சமாக நினைத்து எம்மினத்துக்காக களமாடியவர்களையும் போற்றப்பட வேண்டும். போராட்டத்தினால் விசேட தேவையுடையோராக உள்ளவர்களுக்கு அரசு சிறந்த நலன் திட்டங்களை வகுத்து அவர்களுடைய வாழ்க்கையையும் நல்ல வழியில் செல்லவும், பூரண சுகாதார பாதுகாப்பும் வழங்க வேண்டும் எனவும், வடக்கில் உள்ள முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டோர் உயிரிழை போன்று கிழக்கிலும் அங்கு பாதிக்கப்பட்டவர்களையும் பாதுகாக்கவும் எதிர்காலத்தில் நடவடிக்கை எடுப்பதாகவும் தனது எதிர்கால திட்டத்தில் இதுவும் ஒன்று என தெரிவித்தார்.