கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் ஆலய தேரோட்டம் (நேரலை)

வெள்ளத்தினால் மட்டக்களப்பு எதிர்கொண்டுள்ள ஆபத்து –தொடரும் அவலம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் மாதுறு ஓயாவின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் நீரில் மூழ்கும் நிலையேற்பட்டுள்ளதுடன் போக்குவரத்துகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

நேற்று முன்தினம் மாறுஓயாவின் வான் கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக கிரான் மற்றும் ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகள் கடும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.

ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மாவடியோடை அணையின் ஒரு பகுதி உடைப்பெடுத்துள்ளதன் காரணமாக பல பகுதிகள் ஆபத்தினை எதிர்கொண்டுள்ளது.

இந்த நிலையில் வெள்ள அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்கள் முப்படையினரின் உதவியுடன் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாவடியோடை பகுதிகளில் ஆபத்தினை எதிர்கொண்டுள்ள பகுதிகளில் இருந்து மக்கள் மீட்கப்பட்டு அப்பகுதிகளில் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

மாவடியோடை சிறுவர் வள நிலையத்தில் 36 குடும்பங்களை சேர்ந்த 136பேரும் வேப்பவெட்டுவான் காரைக்காடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் 16குடும்பங்களை சேர்ந்த 56பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களை பாதுகாப்பாக வெளியேற்றி அவர்களுக்கான உணவு உட்பட அத்தியாவசிய தேவைகளை வழங்கும் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் நேரடியாக சென்று முன்னெடுத்தார்.

இதேபோன்று மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியை ஊடறுத்து சித்தாண்டி ஊடாக வெள்ளம் பாய்வதன் காரணமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து வெளியிடங்களுக்கான போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் சித்தாண்டி உட்பட பல பகுதிகள் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெயர்ந்த மக்கள் சித்தாண்டி மகா வித்தியாலயத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பிரம்படித் தீவு , முறுக்கன் தீவு, சாராவெளி, அம்புஸ்குடா போன்று பகுதிகளில் இருந்து மீட்கப்பட்ட மக்கள் கிண்ணையடி பகுதியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ச்சியாக நீர்மட்டம் அதிகரித்துவருவதன் காரணமாக பல பகுதிகள் நீரில் மூழ்கும் ஆபத்து ஏற்படும் என பிரதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.