கிழக்கு மாகாண சமூக பாதுகாப்பு சபையின் விருது வழங்கும் நிகழ்வு

இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் சிறந்த 2018ஆம் ஆண்டுக்கான சிறந்த செயற்பாட்டுக்கான விருதினை கிழக்கு மாகாணத்தில் முதல் இடத்தினை மண்முனை வடக்கு பிரதேச செயலக முன்னாள் பிரதேச செயலாளர் மா.தயாபரன் பெற்றுக்கொண்டார்.

கிழக்கு மாகாணமட்ட விருது வழங்கும் வைபவமானது மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக டேபா மகாநாட்டு மண்டபத்தில் இன்று இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் உதவி பொது முகாமையாளர் நில்மினி.க.கேரத் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது.

கிராம மட்டத்தின் வளர்ச்சியை நோக்காக கொண்டு உருவாக்கப்பட்ட இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் செயற்பாடுகளில் சிறப்பாக செயற்பட்டவர்களை கௌரவிக்கும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.

பிரதேச செயலகங்களில் உள்ள உத்தியோகத்தர்களை ஒருங்கிணைத்து பிரதேச செயலக ரீதியாக வறுமை நிலையில் உள்ள மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்தும் வகையிலான செயற்பாடுகளை முன்னெடுக்கும் வகையில் இந்த சமூக பாதுகாப்பு சபை செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டம் முதல் இடத்தினைப்பெற்றுள்ளது.அதற்கான விருதினை மாவட்ட அரசாஙக அதிபர் எம்.உதயகுமார் பெற்றுக்கொண்டதுடன் இரண்டாவது இடத்தினை அம்பாறை மாவட்டமும் மூன்றாவது இடத்தினை திருகோணமலை மாவட்டமும் பெற்றுக்கொண்டது.

பிரதேச செயலக ரீதியான செயற்பாடுகளில் மண்முனை வடக்கு பிரதேச செயலகம் முதல் இடத்தினைப்பெற்றுள்ளது.அதற்கான விருதினை பெற முன்னாள் பிரதேச செயலாளர் தயாபரன் அழைக்கப்பட்டபோதிலும் அந்த விருதினை தற்போதைய பிரதேச செயலாளர் வாசுதேவன் பெற்றுக்கொண்டார்.

இரண்டாம் இடத்தினை போரதீவுப்பற்று பிரதேச செயலகமும் மூன்றாம் இடத்தினை களுவாஞ்சிகுடி பிரதேச செயலகமும் பெற்றுக்கொண்டது.இதன்போது கிராம சேவையாளர் பிரிவுகள் மத்தியிலும் மூன்று மாவட்டங்களிலும் இருந்து சிறந்த பிரதேசங்கள் தெரிவுசெய்யப்பட்டு விருதுகள் வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் விருதுகளை பெற்றுக்கொள்வதற்காக திருகோணமலை உதவி மாவட்ட செயலாளர் என்.பிரதீபன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் வே.nஐகதீஸ்வரன் பிரதேசசெயலாளர்கள் கணக்காளர்கள் உதவி திட்டமிடல் பணிப்பாளர்கள் கிராமசேவகர்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு விருதுகளையும் சான்றிதல்களை பெற்றுக் கொண்டனர்.