களுவாஞ்சிகுடியில் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களின் நினைவு நாள்

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் 1987ஆம் ஆண்டு காலப்பகுதியில் இந்திய படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட 30 பொதுமக்களின் நினைவு தினம் இன்று அனுஸ்டிக்கப்பட்டது.

23-10-1987ஆம் ஆண்டு களுவாஞ்சிகுடியில் வைத்து இந்திய படையினரால் பட்டிருப்பு தொகுதியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை தமிழரசுக்கட்சியின் முன்னாள் தலைவருமான இராசமாணிக்கத்தின் மகனான சக்கரவர்த்தி உட்பட 30 பொதுமக்களை இந்திய இராணுவத்தினர் சுட்டுகொலைசெய்தனர்.

கண்ணிவெடி தாக்குதல் ஒன்று இந்திய இராணுவத்தினரை இலக்குவைத்து நடாத்தியதை தொடர்ந்து பொதுமக்கள் மீது இந்த கொலைவெறி தாக்குதல் நடாத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் சிறுவர்கள்,பெரியவர்கள்,பெண்கள் என 30பேர் கொல்லப்பட்டனர்.இவர்களை நினைவுகூரும் வகையில் களுவாஞ்சிகுடியில் இராசமாணிக்கம் மக்கள் அமைப்பினால் நினைவுத்தூபியொன்று அமைக்கப்பட்டு நினைவேந்தல் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

இன்று மாலை குறித்த நினைவுதூபியருகே நினைவேந்தல் நிகழ்வு இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் களுவாஞ்சிகுடி பிரதேச பொதுமக்கள்,உயிரிழந்தவர்களின் உறவினர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது ஈகச்சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டு படுகொலைசெய்யப்பட்டவர்கள் நினைவுகூரப்பட்டனர்.