ஆயிரக்கணக்கானோர் மத்தியில் நடைபெற்ற மண்டூர் கந்தசுவாமி ஆலய தீர்த்தோற்சவம்

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப்போற்றப்படும் கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு மண்டூர் கந்திசுவாமி ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் ஆயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ இன்று சனிக்கிழமை காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கந்த புராண  கால  வரலாற்றுடன்  தொடர்புபட்ட ஆலயமாக மண்டூர் கந்தசுவாமி ஆலயம் விளங்கிவருகின்றது.
சூரபத்மனை  சங்காரம்  செய்வதற்கு   முருகன்  ஏவிய  வேல்  ஆறு  பகுதியாக  பிரிந்து சூரனை  வதம்  செய்த  பின்னர்  இலங்கையில்  கதிர்காமப்பகுதியிலும் மண்டூர்  பகுதியிலும்  இருவேல்கள்  தங்கியதாக    கர்ணபரம்பரை கதைகள்  தெரிவிக்கப்படுகின்றன.
கதிர்காமத்தின்  வரலாற்றுடன்  மட்டுமன்றி  இங்குஇடம்பெறும்பூசை  முறைகளும்  பண்டைய  கதிர்காமத்தினை  ஒத்ததாகவே  காணப்படுகின்றன.
கடந்த மாதம் 25ஆம் திகதி ஆலயத்தின் வருடாந்த உற்சவமும் கதிர்காமத்தில் நடைபெறுவதைப்போன்ற முறையில் பண்டைய தமிழர்களின் நடைமுறைக்கு அமைவாக கொடியேற்றம் நடைபெற்றது.
ஆலயத்தின் வருடாந்த உற்சவம் 20 தினங்கள் சிறப்பான முறையில் நடைபெற்றுவந்தது.போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் செல்வி இராகுலநாயகியின் பங்களிப்புடன் உற்சவம் சிறப்பான முறையில் நடைபெற்றுவந்தது.
தங்கவேல்  கொண்டுள்ள  பேழை  அலங்கரிக்கப்பட்டு  அதற்கு  தினமும்  பூசைகள் இடம்பெற்றதுடன்  ஆலய  உள் வீதி  வெளி  வீதியுலா  இடம்பெறவுள்ளதுடன் வள்ளியம்மன்  தெய்வானையம்மன்  ஆலயங்களுக்கும்  பேழை  கொண்டுசெல்லப்பட்டு  பூசைகளும்  நடைபெற்றுவந்தன.
இறுதி நாளான இன்று காலை முருகப்பெருமானுக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தங்கவேல் கொண்டுள்ள பேழை ஊர்வர்வலமாக மட்டக்களப்பு வாவியில் அமைந்துள்ள பண்டைய தீர்த்தக்கேணிக்கு கொண்டுவரப்பட்டு அங்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.
பூஜையினை தொடர்ந்து பக்தர்கள் புடைசூழ வேல் கொண்டுசெல்லப்பட்டு தீர்த்தோற்சவம் சிறப்பான முறையில் நடைபெற்றது.
தீர்த்தோற்சவத்தினை தொடர்ந்து முருகப்பெருமானை தாங்கிய பேழை கந்தசுவாமி ஆலயத்தில் உள்ள தெய்வானை அம்மன் ஆலயத்திற்கு கொண்டுவரப்பட்டபோது அங்கு சிறுமிகள் ஆரத்தி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் இதன்போது ஆரத்தியெடுத்த சிறுமிகள் மயங்கிவிழும் காட்சி பல்லாண்டுகாலமாக நடைபெற்றுவருகின்றது.மயங்கிவிழும் சிறுமிகள் வள்ளியம்மன் ஆலயத்திற்கு கொண்டுசென்று மயக்கம் தெளியவைக்கும் நிகழ்வும் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தீர்த்தோற்சவத்தில் இம்முனை வடக்கில் இருந்தும் தெற்கு பகுதிகளிலும் இருந்தும் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்தும் ஆயிரக்கணக்கான அடியார்கள் கலந்துகொண்டனர்.