உலக தரிசனம் நிறுவனத்தின் நிதி உதவியில் சந்திவெளி நூலகத்தில் சிறுவர்களுக்கான கற்றல் நிலையம்


கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும் தமிழரசுக்கட்சியின் வாலிபர் முன்னனியின் தலைவருமான கிருஷ்ணப்பிள்ளை சேயோனின் முயற்சியால் சந்திவெளி பொது நூலகத்திற்கான சிறுவர் கற்றல் வள நிலையம் இன்று 14.09.2019 திறந்து வைக்கப்பட்டதுடன் வாசிகசாலையின் உபயோகத்திற்காக பெருமளவிலான புத்தகங்களும் அன்பளிப்பு செய்யப்பட்டன. 

சந்திவெளி பொது நூலகத்தின் புதிய கட்டமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ள நிலையில் புத்தகங்கள் மற்றும், சிறுவர்களுக்கென தனியான பகுதியொன்றினது தேவைகள் நிலவி வருவதாக வாசகர் வட்டமும் நூலக உத்தியேகத்தர்களும் குறித்த வட்டாரத்தின் உறுப்பினர் கிருஷ்ணப்பிள்ளை சேயோனிடம் சுட்டிக்காட்டியதைத் தொடர்ந்து கிரான் உலக தரிசனம் பிராந்தி முகாமையாளரிடம் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய மேற்படி சிறுவர்களுக்கான கற்றல் வள நிலையம் அமைக்கப்பட்டுள்ளது.

சிறுவர்களுக்கு சுய கற்றலின் மீதான ஆர்வத்தினைத் தூண்டும் வகையிலும், புத்தாக்கச் செயற்பாடுகளில் ஈடுபட வைத்து நவீன யுகத்தின் சவால்களை வெற்றி கொள்ளும் பிரஜைகளாக வளர்த்தெடுக்கும் நோக்கோடு சுமார் பத்துலெட்சம் ரூபா பெறுமதியில் அமைக்கப்பட்டுள்ள மேற்படி கற்றல் வள நிலையமானது சிறுவர்களின் பாவனைக்காக கையளிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் திருமதி சோபா ஜெயரஞ்சித், பிரதி தவிசாளர் யாசோதரன், உலகதரிசன பிராந்திய இணைப்பாளர் திருமதி இந்து றொகாஷ். பிரதேசசபையின் உத்தியோகத்தர்கள், வாசகர் வட்டத்தினர் மற்றும் எக்கோ விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.