கட்டுத்துவக்கு வெடித்து சிறுவன் பலி – கித்துள் பகுதியில் சோகம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கித்துள் பகுதியில் இன்று மாலை கட்டுத்துவக்கு வெடித்து சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் கித்துள் சர்வோதய நகரை சேர்ந்த சி.தனுஜன் என்னும் 15வயது சிறுவனே உயிரிழந்துள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

நான்கு பேர் வேட்டைக்கு சென்ற நிலையில் அவர்கள் கொண்டுசென்ற கட்டுத்துவக்கு வெடித்து அப்பகுதியில் ஆடுகள் மேய்த்துக்கொண்டிருந்த சிறுவன் படுகாயமடைந்துள்ளார்.

இதன்போது குறித்த சிறுவன் கரடியனாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டபோதிலும் இடையில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் வேட்டைக்கு சென்றதாக தெரிவிக்கப்படுவோரை கைதுசெய்யும் நடவடிக்கைகளை கரடியனாறு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

குறித்த சிறுவனின் தந்தை மாவீரர் எனவும் தாய் வேறு திருமணம் செய்து சென்ற காரணத்தினால் உறவினர் வீட்டில் குறித்த சிறுவன் வசித்துவந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.