பேயா? பிசாசா? எனும் நிலையே எமக்குள்ளது; போட்டுடைத்தார் மாநகர முதல்வர்.

இலங்கையில் உள்ள ஏனைய சிறுபான்மை சமுகத்தினரும் தம்மைப் போல் சம உரிமைகளுடன் இந்த நாட்டில் வாழ வேண்டும் என்னும் மனோநிலையைக் கொண்டிராத தலைவர்களே பெரும்பாலும் ஜனாதிபதி வேட்பாளர்களாக இருக்கின்றார்கள். தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஜனாதிபதி வேட்பாளர் தெரிவில் பேய் சிறந்ததா? பிசாசு சிறந்ததா? எனும் நிலை காணப்படுகின்றதே தவிர அவர் 100 வீதம் சிறந்தவர், தமிழர்களுக்கு நல்லது செய்யக் கூடியவர் எனும் நம்பிக்கை எமது மக்களிடமில்லை. என மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார்.

இன்று (20) மட்டக்களப்பு மாநகர சபைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான அவுஸ்ரேலியா உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி உள்ளிட்ட குழுவினர் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் தமிழ் மக்களின் நிலை என்ன? என்பது தொடர்பில் எழுப்பிய வினாவிற்கு விடையளிக்கும் போதே இவ்வாறு பதிலளித்தார்.

பெரும்பான்மைக் கட்சிகளின் வேட்பாளர்கள் எவரையும் முழுமையாக நம்பி வாக்களிக்கும் நிலையில் தமிழ் மக்கள் இல்லை. காரணம் காலங்காலமாக பல அரசியல் தலைவர்களால் எமது மக்கள் ஏமாற்றப்பட்டுக் கொண்டே வந்துள்ளமையை ஏனைய நாடுகளும், சர்வதேச அமைப்புகளும் நன்கு அறிந்துள்ளன. தற்போதுள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் ஜனாதிபதியாக வந்தால் நல்லது நடக்கும் என்றோ அல்லது பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் வந்தால் நல்லது நடக்கும் என்றோ தமிழ் மக்கள் வாக்களிக்கப் போவதில்லை. இருக்கின்ற கட்சிகளில் எந்தக் கட்சி தமிழர்களை குறைந்தளவில் கொன்றொழித்த கட்சி என்ற நிலையிலேயே வாக்களிக்க வேண்டிய நிலை உள்ளது. எமது பேச்சு வழக்கில் கூறின் பேயா? பிசாசா? எனும் நிலையே காணப்படுகிறது. என முதல்வர் தெளிவுபடுத்தினார்.

மட்டக்களப்பு மாநகர முதல்வரின் அலுவலகத்தில் இடம்பெற்ற மேற்படி கலந்துரையாடலில் அவுஸ்ரேலியாவின் தெற்கு மற்றும் மேற்கு ஆசியப்பகுதிக்கான உதவி செயலாளர் கலாநிதி லஸியன் ஸரீகம், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான செயலாளர் டோம் டேவிஸ் மற்றும் மாநகரப் பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட மாநகரசபையின் உத்தியோகத்தர்கள் ஆசியமன்ற பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.

குறிப்பாக மட்டக்களப்பு மாநகருக்குள் திட்டமிடப்பட்டுள்ள அபிவிருத்திப் பணிகள் தொடர்பிலும் ஆசிய மன்றம் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துளைப்புகளுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதுடன். சுற்றுத்துறையின் விருத்திக்கு அவுஸ்திரேலிய அரசினால் மேற்கொள்ளபடவுள்ள பணிகள் தொடர்பிலும் ஆராயப்பட்டது.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தின் சுற்றுலா உட்பட அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அவுஸ்ரேலிய அரசாங்கம் தேவையான உதவிகளை வழங்க தயாராகவுள்ளதாகவும் அதேபோல்  இலங்கையில் வாழும் தமிழர்கள் தொடர்பில் தாமும், தமது நாடும் தொடர்ந்தும் அக்கறையுடன் செயற்பட்டு வருதாகவும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் டேவிட் ஹோலி தெரிவித்தார்.