பிள்ளையாரடியில் ஏற்பட்ட தீ –கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது

மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் பிள்ளையாரடிப்பகுதியில் ஏற்பட்ட பாரிய தீ மட்டக்களப்பு மாநகரசபை,படையினர்,அனர்த்த முகாமைத்து மத்திய நிலையத்தினால் முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

இன்று மாலை மட்டக்களப்பு-கொழும்பு பிரதான வீதியில் உள்ள பிள்ளையாரடியில் உள்ள சதுப்பு நிலப்பகுதியில் பறகைள் சரணாலய பகுதியில் பாரிய தீ ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக அப்பகுதியில் உள்ள காடுகளில் தீ பரவும் நிலையேற்பட்டதை தொடர்ந்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமாரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

மட்டக்களப்பு மாநகரசபையின் தீயணைக்கும் படையினர் விரைவாக அப்பகுதிக்கு வந்து தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.

இதேபோன்று படையினரும் அப்பகுதிக்கு தீயிணை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன் மாநகரசபை பிரதி முதல்வர் க.சத்தியசீலன், உறுப்பினர்களான து.மதன்,இராஜேந்திரா ஆகியோரும் இந்த தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைக்கு உதவிகளை வழங்கினர்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ நிலைய பணிப்பாளர் உட்பட ஊழியர்களும் தீயணைக்கும் நடவடிக்கைகளில் உதவிகள் வழங்கினர்.

இந்த தீ சம்பவம் எவ்வாறு நடைபெற்றுள்ளது என்பது தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.

மட்டக்களப்பில் வெள்ள காலங்களில் வெள்ள அனர்த்தங்களை தடுக்கும் பிரதான பகுதியாக இந்த சதுப்பு நில பகுதி காணப்படுவதுடன் உள்நாட்டு வெளிநாட்டு பறவைகளின் சரணாலயமாகவும் இருந்துவருகின்றது.

இந்த தீயினால் பெருமளவான காடுகள் எரிந்துள்ளதாகவும் இது தொடர்பான விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பணித்துள்ளதாகவும் மாவட்ட அரசாங்க அதிபர் தெரிவித்தார்.