கொத்துக்குளம் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் தேர் உற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு கொத்துக்குளம் அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மாரசூரனை வதைத்து மாரியம்மன் எனப்பெயர்கொண்டு உலகமெல்லாம் இரட்சித்துவரும் அன்னை மாரியம்மன் அகல் விளக்கு எரியவைத்த காலத்துக்கு முந்திய காலமாக மட்டக்களப்பில் அருள் பாலித்து வருகின்றாள்.

கிழக்கு மாகாணத்தில் காலத்தில் முந்தையதாக கணிக்கப்படும் கொத்துக்குளம் முத்துமாரியம்மன் ஆலயம் மிகவும் சக்திவாய்ந்த ஆலயமாகவும் இந்துக்களால் கருதப்படுகின்றது.

கடந்த 07ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தில் தினமும் விசேட பூஜைகள்,சுவாமி உள்வீதியுலா.வெளிவீதியுலா என்பன நடைபெற்றுவந்தன.

இன்று அன்னையின் தேர் உற்சவத்தினை முன்னிட்டு ஆலயத்தின் விசேட வழிபாடுகள்,பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து சுவாமி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு தேர் முட்டியருகே பல்வேறு கிரியைகள்,பூஜைகள் நடைபெற்றதுடன் பக்தர்கள் தேங்காய் உடைத்தை தொடர்ந்து தீபாராதனையை தொடர்ந்து தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தேர் உற்சவத்தில் பெருமளவானோர் கலந்துகொண்டதுடன் ஆண்கள் பெண்கள் இணைந்து தேரை இழுக்கும் நிகழ்வுகள் நடைபெற்றன.