கல்முனை வடக்கு பிரதேச செயலக கணக்காளர் நியமன விவகாரம் -உண்ணாவிரத போராட்டக்காரர் நன்றி தெரிவிப்பு

(வி.சுகிர்தகுமார்)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான நிரந்தர கணக்காளர் நியமனம் தொடர்பில் தோளோடு தோள் நின்று பாடுபட்டுழைத்த அம்பாரை மாவட்ட தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கும் பிரதேச செயலக தரமுயர்த்தல் தொடர்பில் உண்ணாவிரதத்தினை மேற்கொண்ட உண்ணாவிரதிகள் நன்றியினை தெரிவித்துக்கொண்டனர்.


அக்கரைப்பற்றில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் அலுவலகத்தில் பாராளுமன்ற உறுப்பினரை நேரில் இன்று(15) சந்தித்த அவர்கள் நன்றியினை தெரிவித்துக்கொண்டதுடன் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கை தொடர்பிலும் ஆராய்ந்தனர்.

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்;;த்தக்கோரி உண்ணாவிரத்தை மேற்கொண்டவர்கள் சார்பில் கிழக்கு குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த குருக்கள் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் சா.சந்திரசேகரம் (ராஜன்) ஆகியோர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

இச்சந்திப்பின் போது பிரதேச செயலகத்தின் கணக்காளர் நியமனத்திற்காக தானும் தமது கட்சியும் முன்னெடுத்த நடவடிக்கை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விளக்கமளித்ததுடன் அதற்கான ஆவணங்களையும் சந்திப்பில் கலந்து கொண்டவர்களிடம் காண்பித்தார்.

மேலும் எதிர்காலத்திலும் பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் தொடர்பான தொடர் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் எனவும் கூறினார்.

இச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த குருக்கள்….

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் தரமுயர்த்தல் விடயம் தொடர்பில் தாம் முன்னெடுத்த உண்ணாவிரதப்போராட்டம் பயனுள்ளதாக அமைந்ததாகவும் இச்செயற்பாட்டிற்காக ஆரம்பம் முதல் இன்று வரை முழு மூச்சாக நின்று குரல் கொடுக்கும் அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கும்  நன்றி தெரிவிப்பதாக கூறினார்.

மேலும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட மிகவும் முக்கியமான புத்திசாலித்தனமான நகர்வாகவே இச்செயற்பாட்டை தான் பார்ப்பதாகவும் கூறிய அவர் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கு கிடைத்த பாரிய வெற்றியாக இதனை கருதுவதாகவும் தெரிவித்தார்.  இதன் மூலம் கல்முனை வாழ் தமிழ் மக்கள் தமது உரிமையை பெற்றுள்ளதாகவும் அவர்கள் இதுவரை காலமும் எதிர்கொண்ட இன்னல்களுக்கும் தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

கல்முனை மாநகர சபை உறுப்பினர் சா.சந்திரசேகரம் கருத்து தெரிவிக்கையில்  கடந்த மாதம் 15ஆம் திகதி தாம் முன்னெடுத்த உண்ணாவிரதப்போராட்டத்தில் இணைந்து கொண்டு ஆதரவு கொடுத்த வணக்கத்திற்குரிய ரன்முத்துக்கல சங்கரத்தின தேரர் கிழக்கு குருமார் ஒன்றியத்தின் தலைவர் சிவஸ்ரீ க.கு.சச்சிதானந்த குருக்கள், மாநகர சபை உறுப்பினர் அழகக்கோன் விஜயரெத்தினம் வர்த்தக சங்க தலைவர் லிங்கேஸ்வரன் ஆகியோரை நினைவு படுத்தி நன்றி தெரிவித்ததுடன் கல்முனை இளைஞர்கள் மற்றும் இலங்கையில் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்து கலந்து கொண்ட உறவுகளுக்கும் ஆதரவளித்த புலம் பெயர் உறவுகளுக்கும் நன்றி தெரிவித்தார்.

இதற்கு மேலாக இரவு பகலாக உழைத்த அம்பாரை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரனுக்கும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பிற்கும் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.  இதன் பயனாலேயே இன்று கல்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்கான கணக்கும் திறக்கப்பட்டுள்ளதுடன் கணக்காளர் நியமனமும் நடைபெற்றுள்ளது எனவும் குறிப்பிட்டார்.

மேலும் தற்போது கிடைத்துள்ள 70 வீதமான வெற்றி இந்த வருடத்தினுள் முழுமைத்துவம் பெறவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். இதற்காக எமது பாராளுமன்ற உறுப்பினருடன் இணைந்து குரல் கொடுத்த அத்தனை அரசியல் தலைமைகளுக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் கல்முனை வாழ் மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக கூறினார்.