இந்துமா சமுத்திரத்துடன் சங்கமித்த ஸ்ரீசிவசுப்ரமணியர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிகவும் பிரசித்திபெற்ற முருகன் தலங்களில் ஒன்றாக கருதப்படும் மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீசிவசுப்ரமணியர் ஆலயத்தின் வருடாந்த தீர்த்தோற்சவம் இன்று இந்துமா சமுத்திரத்தில் சிறப்பாக நடைபெற்றது.

கிழக்கிலங்கையின் பிரசித்திபெற்ற மட்டக்களப்பு பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலய வருடாந்த உற்சவம் கடந்த 09ஆம்திகதி வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டத்தின் எல்லைப்பகுதியாகவும் சமுத்திரம் மற்றும் மட்டக்களப்பு வாவியினாலும் சூழப்பட்ட இயற்கை அன்னையின் உறைவிடமான பெரியகல்லாறில் அற்புதங்கள் நிறைந்த ஆலயமாக பெரியகல்லாறு ஸ்ரீ சிவசுப்ரமணியர் ஆலயம் விளங்கிவருகின்றது.

 விசேட விநாயகர் பூஜைகளுடன் ஆரம்பமான கிரியைகளுடன் கொடிக்கு விசேட பூஜை நடைபெற்றதுடன் யாகம் மற்றும் மூலமூர்த்திக்கு அபிசேகம் என்பன நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து திருப்பொற்சுண்ணம் இடிக்கும் நிகழ்வு நடைபெற்றதை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் விசேட பூஜைகள் நடைபெற்றன.பூஜைகளi தொடர்ந்த சுவாமி ஊர்வலமாக கொண்டுவரப்பட்டு வெளிவீதியில் மயில்வாகனத்தில் அமர்ந்து பக்தர்களுக்கு வீதிகளில் அருள்பாலித்தார்.

கதிர்காமக்கந்தனின் தீர்த்தோற்சவத்திற்கு செல்லமுடியாத பக்தர்களுக்கு கதிர்காம கந்தனாக நின்று தீர்த்தோற்சவத்தினை காட்டிவரும் ஆலயமாகவும் இந்த ஆலயம் விளங்கிவருகின்றது.

முருகப்பெருமான் மட்டக்களப்பு பெரியகல்லாறின் சமுத்திரத்தினை சென்றடைந்ததும் அங்கு விசேட அபிசேக மற்றும் பூஜைகள் நடைபெற்று தீர்த்தோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.