ஒரு இனத்தின் வாழ்வியல், கலாச்சாரம், கலை மற்றும் சமய வழிபாட்டு முறைகளின் ஆவணப்படுத்தல் மிக முக்கியமானது – கணேசமூர்த்தி கோபிநாத்


ஒரு இனத்தின் வாழ்வியல், கலாச்சாரம், கலை மற்றும் சமய வழிபாட்டு முறைகளின் ஆவணப்படுத்தல் மிக முக்கியமானது, எதிர்கால சந்ததியினர் தங்களுடைய இனம் பற்றிய வரலாற்றினை அறிந்து கொள்வதற்கு அவ்வாறான ஆவணப்படுத்தல்கள் ஆதாரங்களாக அமையும் என வெல்லாவெளி அருள்மிகு முத்துமாரியம்மன் ஆலய பரிபாலன சபையின் அனுசரணையில் சட்டத்தரணி மு.கணேசராசா அவர்கள் தலைமையில் இடம்பெற்ற கவிக்கோ வெல்லவூர்க் கோபால் எழுத்தில் வெல்லாவெளி வழிபாட்டிலும் அருள்மிகு முத்துமாரியம்மன் திருத்தல வரலாறும் நூல் வெளியீடு விழாவின் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையபாற்றும் போது தேசிய ஒருமைப்பாடு, அரசகரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து சமய விவகார அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் , உதவிப் பணிப்பாளரும், கிழக்கின் இளைஞர் முன்னணியின் தலைவருமான கணேசமூர்த்தி கோபிநாத் தெரிவித்தார். 


அவர் மேலும் குறிப்பிடுகையில் ஆதிகாலத்தில் செல்வச் செழிப்பாகவும், வீரம் செறிந்தவர்களாகவும், கலை, கலாச்சாரத்தில் சிறந்தவர்களாகவும் உலகம் பூராகவும் எமது மூதாதையர்கள் வாழ்ந்திருக்கின்றார்கள். இதனை பல வரலாற்று நூல்கள், வரலாற்று ஆதாரங்கள் பறைசாற்றுகின்றது. ஆனால் இன்று எங்களுடைய இனம் தனது தேவைகளை தேங்க வைத்துக்கொண்டு தங்கள் வாழ்வினை கடத்திக்கொண்டிருக்கின்றதே தவிர மகிழ்வாக வாழ்கின்றது என கூறமுடியாது. மக்களின் அடிப்படை தேவைகளையே நிறைவேற்றுவதற்கு பலம் அற்ற இனமாக நாம் இன்று காணப்படுகின்றோம். இந் நிலையினை மாற்றுவதற்கு அனைவரும் கடமைப்பாட்டுடனும், அர்ப்பணிப்புடனும் எங்களுடைய பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றினால் மாத்திரமே சாத்தியமாகும். அரசியல்வாதிகள்,அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் ஆகிய மூன்று சாராரும் சரியான நேரத்தில் தங்கள் பொறுப்புக்களினை நேர்மையான முறையில் சிந்தித்து நிறைவேற்றினால் மாத்திரமே எமது இனத்தின் இன்றைய நிலை மாற்றமடைந்து ஆரோக்கியமான நிலையினை நோக்கி நகரும். 

வெல்லாவெளி பிரதேசம் கடந்தகால யுத்தத்தினால் முழுமையாக பாதிக்கப்பட்ட பிரதேசம், அதிலும் வெல்லாவெளிக் கிராமம் 14 தடவைகள் இடம்பெயர்வுகளை முகம் கொடுத்து மிக மோசமான யுத்தத்தின் வடுக்களை சுமந்துகொண்டு முன்னேறுவதற்காக துடித்துக்கொண்டிருக்கும் கிராமம் என்பதனை இங்கு உரையாற்றிய இக்கிராமத்தின் பிரமுகர்களின் உரையின் மூலமாக என்னால் அறியமுடிந்தது. எதிர்காலத்தில் இச் சமூகத்தின் எதிர்பார்புகள் நிறைவேற்றப்படுவதற்குரிய முயற்சிகளில் நாமும் ஈடுபடுவோம். கொரவ அமைச்சர் மனோ கணேசன் அவர்களிடம் நான் விடுத்த வேண்டுகோளினை ஏற்று 40 இலட்சத்தினை வெல்லாவெளி அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் அன்னதான மண்டபத்திற்காக வழங்குவதாக உறுதியழித்திருக்கின்றார். எனவே மிக விரைவாக இந்த நிதியொதுக்கீட்டினை பெற்றுக் கொடுப்பதற்குரிய ஏற்பாடுகளை நான் மேற்கொள்வேன். தனது 22வது படைப்பினை வெளியிடுகின்ற மதிப்பிற்குரிய நூலாசிரியரின் சேவை எமது இனத்திற்கு முக்கியமானது, உண்மையிலே 22 வது படைப்பு என்பதைவிட இன்றும் அவருடைய படைப்பாற்றல் 22 வயதேயான இளமைத்துடிப்புடன் இருப்பதனை இந்நூலின் சில பக்கங்களை வாசிக்கும் போது என்னால் உணரமுடிகின்றது. என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதுடன் மேலும் அவர் இவ்வாறான படைப்புக்களை வெளியிட வேண்டும் எனவும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்  என தனது உரையில் கூறியிருந்தார்.

25.05.2019 வெல்லாவெளி கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வெல்லாவெளி பிரதேச செயலாளர் செல்வி இரா.ராகுலநாயகி, மட்டக்களப்பு தமிழ்ச்சங்கத்தினர், வர்த்தக சங்கத்தினர், பிரதேசத்தின் ஆலயங்களின் தர்மகர்த்தாக்கள் மற்றும் கிராம நலன்விரும்பிகள் பலர் கலந்து சிறப்பித்திருந்தனர்.