முஸ்லிம் பயங்கரவாதிகளினால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டம்

கடந்த 40 வருடத்திற்கும் மேலான ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் மத்திய அரசாங்கத்தின் கைக்கூலிகளாக செயற்படுவதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என கிழக்கு மாகாண முன்னாள் மாகாணசபை உறுப்பினர் இரா.துரைரெட்னம் தெரிவித்தார்.

தமிழர்களின் போராட்டம் என்பது ஒரு இனத்திற்கான போராட்டமாக இருந்தது எனவும் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் என்பது முஸ்லிம் பயங்கரவாதிகளினால் தமிழர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போராட்டம் எனவும் அவர் தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.இங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மட்டக்களப்பு மாவட்டத்தின் அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு மூன்று முஸ்லிம்கள்; நியமிக்கப்பட்டதற்கு எமது கண்டனத்தினை தெரிவித்துக்கொள்கின்றோம். மட்டக்களப்பு மாவட்டத்தி;ன் அபிவிருத்தி குழுக்களின் இணைத்தலைவர்களாக மூன்று முஸ்லிம்களும் ஒரு தமிழரும் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்று நிரூபத்திற்கு முரணாகவும் இந்த மாவட்டத்தின் இனவிகிதாசாரத்திற்கு முரணாகவும் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி அவர்கள் தனது அரசியலுக்காக மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தியை முஸ்லிம்களுக்கு வழங்கி இனத்தினை அழிக்காமல் பெரும்பான்மையாக தமிழர்கள் உள்ள இந்த மாவட்டத்திற்கு பெரும்பான்மையாக மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர்களாக தமிழர்களை நியமிக்க நடவடிக்கையெடுக்கவேண்டும்.

வடகிழக்கில் தமிழ் மக்களைபொறுத்தவரையில் 2009ஆம் ஆண்டு துப்பாக்கிகள் மௌனிக்கப்பட்டதன் பின்னர் இந்த ஆட்சிக்காலத்தில் மத்திய அரசாங்கத்தின் இராணுவ ரீதியான நெருக்கடி குறைக்கப்பட்டது.அதன்பின்னர் தமிழர்கள் இலங்கையின் எப்பாகத்திற்கும் அச்சமின்றி சென்றுவரக்கூடிய நிலையேற்பட்டது.அதேபோன்று கல்வி,பொருளாதார,அபிவிருத்தி ரீதியாகவும் மாற்றங்களை காணமுடிந்தது.

வடகிழக்கில் உள்ள தமிழ் பேசும் மக்களை பொறுத்தவரையில் சில விடயங்களுக்கு அப்பால் ஒற்றுமையாக வாழக்கூடிய சூழ்நிலையிருந்தது.தமிழர்களின் போராட்டம் என்பது ஒரு இனத்திற்கு எதிரான போராட்டங்கள் அல்ல.தமிழர்களின் போராட்டம் தமிழ் தேசியத்திற்காகவும் அரச பயங்கரவாத்திற்கு எதிராகவுமே இருந்தது.

ஆனால் உயிர்த்த ஞாயிறு அன்று முஸ்லிம் பயங்கரவாத அமைப்பினால் நடாத்தப்பட்ட  தாக்குதல் என்பது தமிழ் சமூகத்திற்கு எதிரான போராட்டமாகும். தமிழ் சமூகத்திற்கு எதிரான போராட்டம் என்றவகையில் எங்களால் ஜீரணிக்கமுடியாது.

வடகிழக்கில் உள்ள தமிழ் மக்கள் நீண்டகால அனுபவத்தினைக்கொண்டவர்கள். துப்பாக்கி கலாசாரத்திற்குள் வாழ்ந்தவர்கள். எதிர்சமூகம் மேற்கொள்ளும் வன்முறைகளை எவ்வாறு தடுக்கமுடியும் என்பதில் பலம்வாய்ந்தவர்கள்.அதற்கு இணையாக செயற்படக்கூடியவர்கள்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்பட்ட நிலையிலும் மட்டக்களப்பு மாவட்;டத்தில் ஏனைய சமூகத்திற்கு எதிராக எந்த வன்முறையினையும் தமிழர்கள் செய்யவில்லை.இதில் தமிழர்கள் மிகவும் தெளிவாக இருக்கின்றார்கள்.இது தமிழர்களின் பலவீனம் அல்ல.இது தமிழர்களின் பலம்.நாங்கள் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக மேற்கொண்ட போராட்டத்தில் சில தவறுகள் இருக்கலாம்.அதனை நாங்கள் சுயவிமர்சனம் செய்துள்ளோம்.

முஸ்லிம் பயங்கரவாதிகளினால் தமிழ் மக்கள் மீது நடாத்தப்பட்ட தாக்குதலை தடுப்பதற்கான வாய்ப்புகள் முஸ்லிம் சமூகத்திடம் இருந்திருக்கின்றது.சில அரசியல்வாதிகள்,புத்திஜீவிகள்,கல்விமான்கள் அந்த முஸ்லிம் பயங்கரவாத அமைப்புகளுடன் நேரடி தொடர்புகளை கொண்டிருந்திருக்கின்றார்கள்.

அந்த அடிப்படையிலேயே கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் அமைச்சர் ரிசாத் பதியூதீன் ஆகியோர் விசாரணைசெய்யப்படவேண்டும் சட்டத்தின் முன்பாக நிறுத்தப்படவேண்டும்.சட்டம் தீர்ப்பளிக்கவேண்டும்.தமிழர்கள் சட்டத்திற்கு மதிப்பளிக்கின்றார்கள்.நாங்கள் சட்டத்தினை மதிக்காதவர்களாக இருந்திருந்தால் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை தொடர்ந்து தமிழர்களும் வன்முறையில் ஈடுபட்டிருக்கமுடியும்.ஆனால் தமிழர்கள் தெளிவானவர்கள்.சட்டத்தின் மீது இன்னும் நம்பிக்கைகொண்டுள்ளனர்.

எதிர்காலத்தில் தமிழ் மக்களை பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மத்திய அரசாங்கத்தின் கைகளில் உள்ளது.குண்டுத்தாக்குதலை மேற்கொண்டவர்களை பாதுகாப்பதற்கான செயல்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன.

குண்டுத்தாக்குதலின் பின்னர் வடகிழக்கில் இருந்த நிலைமையில் மாற்றங்கள் எற்பட்டுள்ளன.தேசிய ரீதியான அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.இந்த மாற்றங்கள் ஒட்டுமொத்தமாக தமிழர்களுக்கு சார்பானதாக இல்லை.இங்குள்ள ஆட்சியாளர்கள் அனைவரும் தமிழர்களை ஏமாற்றியவர்கள் என்பதை தமிழ் சமூகம் நன்கு அறியும்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களுக்கு எதிராக செயற்படுபவர்களுக்கு தமிழ் மக்கள் தகுந்த பாடத்தினை புகட்டுவார்கள். இலங்கை அரசாங்கத்தினை காப்பாற்றவேண்டிய பொறுப்பு தமிழ் பிரதிநிதிகளுக்கு இல்லை.கடந்த 40 வருடத்திற்கும் மேலான ஆயுத போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அரசியல் ரீதியாக முன்னெடுக்கப்படும் போராட்டங்களுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் தலைவர்கள் மத்திய அரசாங்கத்தின் கைக்கூலிகளாக செயற்படுவதை தமிழ் மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
எதிர்காலத்தில் வடகிழக்கு தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்திசெய்யவேண்டிய பொறுப்பு தமிழ் மக்களின் வாக்குகளைப்பெற்ற பிரதிநிதிகளுக்கு உள்ளது.