பள்ளிக்குடியிருப்பு பிரதான வீதியை செப்பனிட்டு தருமாறு மக்கள் கோரிக்கை .திருகோணமலை மாவட்ட மூதூர் பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பள்ளிக்குடியிருப்பு பிரதான வீதியானது 30 வருடங்களுக்கு மேலாக எதுவித அபிவிருத்திக்கும் உட்படாது மக்களின் போக்கு வரத்திற்கு மிகவும் சிதைவடைந்து குன்றும் குழியுமாக மிக மோசமான நிலையிலேயே காணப்படுகின்றது.

இதனால் தினமும் இவ்வீதியில் விபத்ததுக்கள் பல ஏற்படுவதோடு பயணிகள் பெரும் அசெகரியங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர் .

இவ் வீதி ஊடாக தோப்பூர் பள்ளிக்குடியிருப்பு, சின்னக்குளம் பாட்டாளிபுரம் , தங்கபுரம் , இத்திகுளம் , வீரமாநகர், நல்லூர் சீனன்வெளி, உப்புரல் , சோலையூர், சம்பூர் கடற்கரைசேனை, விளக்கந்தை, இகல்பாநகர் , இலங்கைதுறை முகத்துவாரம் (லங்காபட்டினம்) போன்ற பல்வேறு கிராம மக்களுக்கான பிரதான வீதியாகவும்  கணப்படுகின்றதுடன் இவ் வீதியை 6000 க்கும் மேற்பட்ட மக்கள் பயன்படுத்துகின்றமையும் குறிப்பிடத்தக்கது.


இவ் வீதியை செப்பனிட்டுதருமாறு இக்கிராம மக்களால் வீதி அமைச்சு ,  மாகாண வீதி அமைச்சு,  பிரதேச செயலகம் பல்வேறு எதிர்கட்சி , ஆளும் கட்சி , பாராளுமன்ற, மாகாணசபை உறுப்பினர்களிடமும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டு மகஜர்களும் கையளிக்கப்பட்டுள்ளதுடன் , இவ் வீதியை செப்பனிட்டு தருமாறு கோரி இக்கிராம மக்களால் 2014ம்ஆண்டு தொடக்கத்தில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டும் இதுவரை தமிழர் பகுதி என்பதாலோ புறக்கணிக்கப்படுகின்றது என பொதுமக்கள் வேதனைப்படுகின்றனர்.


மாணவர்கள் , நோயாளிகள் , முதியவர்கள் போன்றோர் இவ் வீதியால் பயணிக்கையில்  பெரிதும் பாதிப்படுவதுடன் நோயாளிகளை அருகில் உள்ள தோப்பூர் வைத்தியசாலைக்கு விரைவாக கொண்டு செல்ல முடியாத துர்பாக்கிய நிலையிலுமே இம் மக்கள் வாழ்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 எனவே மூதூர் பள்ளிக்குடியிருப்பு பிரதான வீதியை மிக விரைவாக செப்பனிட்டு தருமாறு இக்கிராம மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர் .