முந்திரி வியாபாரத்திற்கு மந்திரிகள் உதவவேண்டு-வியாபாரிகளின் வேதனை வெளிபாடு –நேரடி ரிப்போர்ட்



(சசி துறையூர் )

மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது பரவலாக மரமுந்திரி பழ விற்பனை பருவகாலம் ஆரம்பித்து விட்டது.  

கிரான்குளம் புதுக்குடியிருப்பு பகுதிகளிலே  முந்திரி விற்பனை அதிகமாக சூடுபிடித்திருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளது.



  மட்டக்களப்பு   மாவட்டத்தின் ஏறாவூர் பற்று பிரதேச செயலாளர் பிரிவு சவுக்கடி , தாளவாய் போன்ற இன்னும் சில பகுதிகளிலும், வாகரை பிரதேசத்திலும் மரமுந்திரி செய்கை பண்ணப்படுகின்ற போதும் மரமுந்திரிகை செய்கையும் அது சார்ந்த விற்பனையும் தாழங்குடா, புதுக்குடியிருப்பு, கிரான்குளம் போன்ற பகுதிகளிலே அதிகம் .

முந்திரி பழவிற்பனை வருடத்தில் குறிகியகாலத்திற்கு மாத்திரமே  அதாவது சித்திரை மாதத்தின் நடுப்பகுதி தொடக்கம் ஆனி மாத நடுப்பகுதிவரை நடைபெறுகிறது.

பெரியளவிலான  மரமுந்திரிகை செய்கையாளர்களிடமிருந்து வாங்கியும் தமது சொந்த தோட்டத்தில் செய்கை பண்ணியும் அறுவடை செய்து   விற்பனையில் ஈடுபடும்  வியாபாரிகள் இங்கு பாரிய அளவில் இலாபத்தை ஈட்ட முடிவதில்லை.

  வருடத்தில் இரண்டு மாதகாலம் மாத்திரமே முந்திரி பழ விற்பனை  நடைபெறும். நூறு ரூபாய்க்கு பதினைந்து தொடக்கம் இருபது பழங்கள் விற்கப்படுகின்றன. 
ஆனால் முந்திரி பருப்பு விற்பனை ஆண்டு முழுவதும்   நடைபெறுகிறது.



  முந்திரி பழத்தை விட அதன் விதை/பருப்பு  விலை அதிகம் . தோல் நீக்கிய முந்திரி பருப்பு ஒரு கிலோ  சுமார் 1600 தொடக்கம் 2400 வரையிலும் விற்பனையாகிறது.

 மர முந்திரி செய்கையாளர்களும் , செய்கையாளர்களிடமிருந்து வாங்கி விற்பனையிலிடுபடும் நடைபாதை வியாபாரிகளும்   இதன் மூலம்  நிரந்தர வருமானத்தை, அல்லது அதிக வருமானத்தை பெற முடிவதில்லை. 

 இவர் களிடமிருந்து 250 தொடக்கம் 350 ரூபாய்க்கு தோல் நீக்காத முந்திரி விதைகளை கொள்வனவு செய்யும் மூன்றாம் தரப்பினர் கொள்ளை இலாபமீட்டுகின்றனர்.

குறித்த பகுதிகளில் முந்திரி வியாபாரத்தில் ஈடுபடும் பலரிடம் ஆதங்கமும் ஏக்கமும் அதிகமாக உள்ளது, முந்திரி மரம் நட்டு மூன்று தொடக்கம் ஜந்து வருடங்கள் பராமரித்து ஆண்டுக்கு ஒருதடவை விளைச்சலை அறுவடை செய்தால் எங்களால் அதிக இலாபம் ஈட்டமுடிவதில்லை என்கின்றனர்.

காரணம் விதை பதனிடல் உபகரணம் இன்மை,(தோல் நீக்கும் உபகரணம்)     அதுதொடர்பாக பயிற்சியும் வழிகாட்டலுமில்லை,  வங்கியில் கடன்பெற்று பதனிடல் இயந்திரம் கொள்வனவு செய்வதென்றால் அதற்கும் முடிவதில்லை, வங்கிகடன் பெற அரசாங்கவருமானம் பெறும் இரண்டு பிணையாளிகள் வேண்டும்  எங்களுக்கு யார் உதவுவார்.? இப்படி பல ஆதங்கம் இந்த தெருவோர வியாபாரிகளிடம்.



புதுக்குடியிருப்பு தெருவோரமாய்  தாய் ஒருவரிடம் உரையாடிய போது.

அம்மா முந்திரி பழ வியாபாரம் எப்படி ?

நான் முந்திரி பழம் வாங்கித்தான் விற்கிறேன்  நூறுரூபாய்க்கு பதினெட்டு பழம் விற்கிறேன், விற்றால் பதினைந்து தொடக்கம் இருபது ரூபா இலாபம் கிடைக்கும்.

ஒரு நாளைக்கு ஜந்து முதல் பத்து வேக்தான் விற்க முடிகிறது, இங்க பாருங்க றோட்டு நெடுக எல்லோரும் முந்திரி விற்காங்க. இதுக்குல்ல எங்க நாங்க போட்டி போட்டு விக்க முடியும், இவருக்கும் காது விளங்காது, இவரும் என்னோடு வியாபாரத்துக்கு துணையாக வந்திடுவார் பேசவும் சிரமம் நான்தான் அவரையும் கவனிக்கனும்.

தம்பி பழத்த அதிகமாகவும் நம்பி வாங்கி வைச்சு விக்கவும் ஏலாது,.

ஏன் அம்மா?
அடிக்கிற வெயிலுக்கு இரண்டு நாளைக்கு மேல இந்த பழத்தை வைச்சுக்கொள்ள ஏலாது அழிகிடும்.

இதென்ன பச்சைக்காயாக இருக்கு.?



இது முந்திரி இளம் காய் பருவத்தில எடுக்கிற முந்திரி கொட்டைதான், இது கறி வைக்க நல்லாயிருக்கும், கொண்டு ஆக்கிப்பருங்களன். கிலோ அறுபது ரூபாதான்.

 பேசிக்கொண்டீருக்க இடையில் இன்னுமொரு ஐயா வந்தார் அவரிடமும் சில விடயங்களை அறிய கிடைத்தது.

மர முந்திரி செய்கை,  அதன் வியாபாரம் தொடர்பாக பலவிடயங்களை புட்டு வைத்தார்.

தம்பி நம்ப இளைஞர்கள் பலர் கொழும்புக்கும்,  அரபுநாட்டுக்கும்,  போதாதுக்கு உயிரை பணயம் வைத்து களவாக கப்பலேறி கடல்கடந்து வெளிநாடுகளுக்கு பொழைப்பு தேடி போகின்றார்கள், எவ்வளவோ தொழில் பார்க்க இங்க வழிகள் நிறைய இருக்கு.

 ஏன்தான் விளங்கிகொள்றாங்க இல்லையோ எனக்கு தெரியல்ல. 

 இங்க பாருங்க  முந்திரி விதை தோல் நீக்காதது எங்களிடமிருந்து 250 ரூபாதான்  வாங்கிட்டு போய் என்ன பண்றாங்க தோலை கழற்றித்து ஒருகிலோ 2000ரூபாய்க்கு மேலே விற்பனை செய்கிறார்கள் , இத ஏன் இந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் செய்ய முடியாது?

 படித்த இளைஞர்களுக்கு அரசாங்க வேலைதான் வேணுமென்றுதானே போராடுறாங்க. 

கைத்தொழில் எவ்வளவோ இருக்கே!! இவ்வாறான தொழிலை பார்த்தால் சம்பாத்தியமும் ஆகும் பத்து நூறு பேருக்கு தொழில் வாய்ப்பும் கிடைச்சமாதிரியும்
 போயிரும்தானே ?    அரசாங்க உத்தியோகம் கிடைக்கிற நேரம் கிடைக்கட்டுமே. 

படித்த இளைஞர்கள் முன் வந்து தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்து, அரசியல் வாதிகளின்ட உதவியும் பெற்று ,  இந்த தொழில் முயற்சியில் ஈடுபடனும். 

அல்லது இவ்வாறு வியாபாரத்தில் ஈடுபடும் மக்கள் பலர் ஆர்வமாக உள்ளார்கள் அவர்களுக்கு இந்த பதனிடும் உபகரணங்களை கொள்வனவு செய்து இலவசமாகவோ அல்லது மானியமாகவோ கொடுத்து இந்த மரமுந்திரிகை பயிர்ச்செய்கையாளர்களையும், வியாபாரிகளையும் ஊக்குவிக்க வேண்டும்.   ,,,, 

தொடரும்