வடகிழக்கில் துக்க தினம் இன்றும் அனுஸ்டிப்பு –வழமைக்கு திரும்பும் மட்டக்களப்பு

வடகிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுத்த அழைப்பினையேற்று துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டுவரும் வேளையில் மட்டக்களப்பு மாவட்;டத்தின் இயல்புநிலை வழமைக்கு திரும்பிவருகின்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று விடுத்த அழைப்பினைத்தொடர்ந்து வடகிழக்கில் இன்று துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

வீடுகளிலும் வீதிகளிலும் கறுப்புக்கொடி பறக்கவிடப்பட்டு துக்க தினம் அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இன்று வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு இயல்பு நிலைகள் வழமைக்கு திரும்பிவருவதை காணமுடிகின்றது.

குறிப்பாக தமிழ் பகுதிகளில் இன்று காலை தொடக்கம் வர்த்தக நிலையங்கள் திறக்கப்பட்டு வர்த்தக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எனினும் மட்டக்களப்பு நகரில் முஸ்லிம்களின் வர்த்தக நிலையங்கள் திறக்கப்படாத நிலையிலும் தமிழர்களின் கடைகள் திறக்கப்பட்டு வியாபார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பில் தாக்குதல் நடைபெற்ற பகுதிகளிலும் இயல்பு நிலையேற்பட்டுள்ளதுடன் அப்பகுதியூடான போக்குவரத்துகளும் நடைபெற்றுவருவதை காணமுடிகின்றது.

இதேநேரம் மட்டக்களப்பு நகர் உட்பட அனைத்து பகுதிகளிலும் பாதுகாப்பு பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் ரோந்து பணிகளும் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

மட்டக்களப்பு நகருக்குள் வரும் வாகனங்கள் படையினர் மற்றும் விசேட அதிரடிப்படையினர் இணைந்து சோதனைக்குள்ளாக்கிவருகின்றனர்.

மட்;டக்களப்பு நகர் உட்பட மாவட்டத்தில் முக்கிய இடங்களில் உள்ள வழிபாட்டு தலங்களுக்கு படையினர் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன் பொலிஸாரும் பாதுகாப்புகளை வழங்கிவருகின்றனர்.

இதேநேரம் தொடர்ந்து குண்டு தாக்குதல்கள் இடம்பெறலாம் என்ற அச்ச நிலை காரணமாக மட்டக்களப்பில் உள்ள இளைஞர்களும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்துவருவதுடன் பாதுகாப்பு தரப்பினருக்கு உதவி வருகின்றனர்.

நேற்று மாலை ஊறணி பகுதியில் சந்தேகத்திற்கிடமானவர்களின் நடமாட்டம் தொடர்பில் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பொலிஸார் அப்பகுதிக்கு சென்று தேடுதல் நடவடிக்கைகளையும் முன்னெடுத்ததாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று காலை திராய்மடு பகுதியில் சந்தேகத்திற்கிடமாக பெரிய பையொன்றுடன் மோட்டார் சைக்கிளில் நடமாடிய நபர் ஒருவரும் அப்பகுதி இளைஞர்களினால் பிடிக்கப்பட்டு அருகில் உள்ள இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

எனினும் அவர் தனியார் தொலைத்தொடர்பு தொடர்பான விற்பனை பிரதிநிதியென்பதை அறிந்த படையினர் அவரை பாதுகாப்பாக அனுப்பிவைத்தனர்.