மட்டக்களப்பில் சொகுசு காரில் சிக்கிய கேரள கஞ்சா

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகப்பிரிவுக்குட்பட்ட பிள்ளையாரடிப்பகுதியில் நேற்று புதன்கிழமை மாலை சொகுசு காரில் கேரளா கஞ்சா கடத்தியவர்களை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன் அவர்களிடம் இருந்து பெருமளவு கஞ்சாவினையும் மீட்டுள்ளனர்.

ஜனாதிபதியின் போதையொழிப்பு வாரத்தினை முன்னிட்டு விசேட நடவடிக்கை மேற்கொண்டுவரும் பொலிஸார் இந்த போதைப்பொருள் கடத்தலை முறியடித்துள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எம்.என்.எஸ்.மெண்டிஸின் ஆலோசனைக்கு அமைவாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக நிர்வாகப்பிரிவு பொறுப்பதிகாரி பி.டி.பி.பண்டார தலைமையிலான பொலிஸ் குழுவினர் இந்த போதைப்பொருள் கடத்தலை முறியடித்துள்ளனர்.

இதன்போது குருணாகல் பகுதியை சேர்ந்த இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவர்களிடம் இருந்து சுமார் இரண்டு கிலோ கேரளா கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் மீட்கப்பட்டுள்ளது.

கைதுசெய்யப்பட்டவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதுடன் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக மட்டக்களப்பு பொலிஸ் தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.