மட்டக்களப்பு மாநகரசபைக்குள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள் பிளவு? - வெளியேறிய எட்டு உறுப்பினர்கள்

மட்டக்களப்பு மாநகரசபையின் 17வது அமர்வு இன்றைய தினம் மாநகர முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் இடம்பெற்றபோது தமிழ் தேசிய கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

மாநகரசபையினை மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பேற்று நாளை (05) உடன் ஒரு வருடம் பூர்த்தியாகின்ற நிலையில் இந்நடப்பாண்டுக்கான இறுதி அமர்வாக இது நடைபெற்றது.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் கீழ் உள்ள மட்டக்களப்பு மாநகரசபையின் அமர்வு வழமைபோன்று சபைச் சம்பிரதாயங்களின் பிரகாரம் சபை அமர்வுகள் ஆரம்பிக்கின்ற வேளையில் முதல்வரின் பல்வேறு செயற்பாடுகளில் அதிருப்தியிருப்பதாகவும், கலந்துரையாடல் இல்லாமல் தன்னிச்சையாக செயற்படுவதாகவும் தெரிவித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எட்டு உறுப்பினர்கள் இன்றைய சபை அமர்வினைப் புறக்கணித்து வெளிநடப்புச் செய்தனர்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தமிழீழ விடுதலை இயக்கத்தைச் (டெலோ) சேர்ந்த மாநகர பிரதி முதல்வர் க.சத்தியசீலன் உட்பட உறுப்பினர்கள் ஐவர், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் (புளொட்) உறுப்பினர் இருவர், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவர் என எட்டு உறுப்பினர்கள் இவ்வாறு வெளிநடப்புச் செய்தனர்.

இருப்பினும், சபை நடவடிக்கைகள் தொடச்சியாக இடம்பெற்றன. பல்வேறு பிரேரணைகள், முன்மொழிவுகள் சபையில் நிறைவேற்றப்பட்டன.

இதன்போது சபை வெளிநடப்பு தொடர்பில் மாநகர பிரதி முதல்வர் கருத்து தெரிவிக்கையில், மாநகர முதல்வரின் பலவேறு செயற்பாடுகள் எமக்கு அதிருப்தி அளிப்பதுடன், கலந்துரையாடல் இல்லாமல் தன்னிச்சையான சில முடிவுகளை மேற்கொள்வதன் காரணமாக நாங்கள் எமது கட்சியின் மாவட்டத் தலைமைகளுடன் கலந்துரையாடல்களை மேற்கொண்டு இன்றைய தினம் சபை நடவடிக்கைகளில் இருந்து வெளிநடப்புச் செய்வது என்ற தீர்மானத்தினை மேற்கொண்டிருந்தோம்.

எமது இந்தத் தீர்மானத்திற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளான புளொட் கட்சியின் உறுப்பினர்கள் இருவரும், இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் உறுப்பினர் ஒருவரும் ஆதரவளித்து எம்முடன் வெளிநடப்புச் செய்துள்ளனர்.இம்முடிவு கட்சி செயற்பாடுகளுக்கு விரோதமாக எடுக்கப்படவில்லை. எதிர்வரும் காலத்தில் எமது ஒற்றுமையினை வலுப்பெறச் செய்யவும், கலந்துரையாடல்கள் மூலம் முடிவெடுக்கும் செயற்பாட்டை உறுதிப்படுத்தும் முகமாகவுமே இவ் வெளிநடப்பு நடவடிக்கை எம்மால் மேற்கொள்ளப்பட்டது.

எதிர்வரும் காலத்தில் இந்நிலைமைகளைக் கருத்திற் கொண்டு ஒற்றுமையை வலுப்பெறச் செய்யும் முகமாக மாநகர முதல்வர் நடந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்தார்.

எனினும் எந்த தீர்மானங்களும் தன்னிச்சையாக எடுக்கப்படவில்லையெனவும் மாநகரசபையின் சட்ட திட்டங்களுக்கு ஏற்ப அனைவரின் ஒத்துழைப்புடனேயே தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தி.சரவணபவன் தெரிவித்தார்.