மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இடம்பெறும் மரணங்கள் -மட்ட்ககளப்பு மாநகரசபையில் தீர்மானம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் செயற்பாடுகள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதன் செயற்பாடுகளை சிறந்த முறையில் கொண்டுசெல்ல அரசாங்கம் நடவடிக்கையெடுக்கவேண்டும் என்ற வகையிலான பிரேரணையொன்று ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் செல்வி தயாளகுமார் கௌரியினால் மட்டக்களப்பு மாநகரசபையில் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாநகரசபையின் 17வது மாதாந்த அமர்வு இன்று காலை மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன் தலைமையில் நடைபெற்றது.

இந்த அமர்வின்போது பல்வேறு தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டதுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை தொடர்பான தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர் செல்வி தயாளகுமார் கௌரியினால் இந்த தீர்மானம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.இதன்போது தீர்மானத்தினை சமர்ப்பித்து கௌரி உரையாற்றினார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் கடந்த சில காலங்களாக மருத்துவ சிகிச்சையின் கவனயீனம் காரணமாக பல உயிர்கள் காவுகொள்ளப்பட்டுள்ளதாக ஊடகங்கள் வாயிலாக தெரிவிக்கின்றன.

இங்கு உயிரிழந்தவர்கள் பணம் படைத்தவர்கள் அல்ல சாதாரண ஏழை மக்கள்.வறுமைக்கோட்டின் கீழ் மக்களின் பிள்ளைகளே இவ்வாறான கவலையீனம் காரணமாக உயிரிழக்கின்றனர்.

அண்மையில் வந்தாறுமூலையில் விபத்துக்குள்ளாகி காயங்களுடன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு வேறு ஒருவரின் இரத்தம் மாற்றப்பட்டு அதன்காரணமாக உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவத்தினை மூடிமறைக்க கூடிய சூழ்நிலையும் காணப்படுவதனால் அது தொடர்பில் முழுமையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும்.

குறித்த சிறுவனின் உயிரிழப்பு தொடர்பில் பெற்றோருக்கு அறிவிக்கப்படவில்லை.பெற்றோர் சந்தேகப்பட்டு வைத்தியசாலையில் உள்ள பொலிஸ் காவலரணுக்கு சென்று அழுதுபுலம்பி தனது பிள்ளையின் நிலையினை அறிந்துசொல்லுமாறு கோரியபோது பொலிஸார் அது தொடர்பில் விசாரித்தபோது சிறுவன் இறந்த செய்தி பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.அவ்வாறானால் ஏன் அவர்கள் அதனை மறைக்கவேண்டும்.இதில் பல சந்தேக காரணிகள் உள்ளதை உணரமுடிகின்றது.

இந்த வைத்தியசாலை நிர்வாகம் அந்த ஏழைத்தாயின் மகனின் இறப்புக்கு சரியான தீர்வினை வழங்கவேண்டும்.மட்டக்களப்பு மாநகரசபையின் எல்லைக்குள் இருக்கும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இவ்வாறான கவலையீனங்களினால் உயிர்கள் காவுகொள்ளப்படுவது தடுக்கப்படவேண்டும்.

இந்த பிரச்சினையை மட்டக்களப்பு மாநகரசபையின் அனைத்து உறுப்பினர்களினதும் ஒத்துழைப்புடன் உரிய இடத்திற்கு கொண்டுசென்று உரிய தீர்வினைப்பெறவேண்டும்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் என்ற வகையில் தொடர்பான தீர்மானங்களை ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சருக்கு அனுப்பிவைக்கவுள்ளோம்.என்றார்.இது தொடர்பான தீர்மானம் சபையில் நிறைவேற்றப்பட்டது.