வடகிழக்கு மக்களுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு அவசர அழைப்பு

24ம் திகதி நடைபெறவுள்ள துக்கதினம் கடைப்பிடித்தல் எனும் செய்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தனித்துவமான தீர்மானமே தவிர கிழக்கு ஆளுநருக்கு எவ்வித சம்பந்தமும் இல்லை. வடமாகாண ஆளுநரிடம் தெரிவித்தது போலவே கிழக்கு மாகாண ஆளுநரிடமும் தெரிவிக்கப்பட்டது.
அரசியல் நோக்கத்திற்காக கிழக்கு ஆளுநருடன் சேர்த்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்புகின்றார்கள் என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

 24 இடம்பெறவுள்ள துக்கதின அனுஷ்டிப்பு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு ஆளநருடன் சேர்ந்து மேற்கொள்ளும் செயற்பாடு என மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்ற கருத்து தொடர்பில் இன்று மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 21ம் திகதி மட்டக்களப்பிலும், கொழும்பு உள்ளிட்ட வேறிடங்களிலும், நிகழ்ந்த துன்பியல் கொடூரமானது, மிகவும் துக்ககரமானது. இத்துன்பியல் தொடர்பில் வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் தங்கள் துக்கத்தை வெளிப்படுத்தி 24ம் திகதியான நாளைய தினத்தை துக்கதினமாகக் கடைப்பிடிக்குமாறும், இதனை வெளிப்படுத்தும் வகையில் கடைகள், பொது இடங்கள், மற்றும் வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்களில் கறுப்புக் கொடிகளைப் பறக்க விடுமாறும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அவர்கள் 22ம் திகதி பத்திரிகை அறிக்கை ஒன்றை வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு முன்னதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய தலைவர்கள் மற்றும் வடமாகாண வர்த்தக சங்கங்கள், வடமாகாண ஆளுநர் என்போரையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.

22ம் திகதி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் அவர்கள் மட்டக்களப்புக்கு வருகை தந்து துன்பியலுக்கு இலக்கான உறவுகளின் பல மரணச் சடங்குகளில் கலந்து கொண்டார். அவர் மட்டக்களப்பில் இருந்து திரும்பும் முன்னர் வணக்கத்துக்குரிய ஆயர் அவர்களைச் சந்தித்தார். அந்த நிகழ்வுகளிலெல்லாம் நான் உட்பட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அன்பர்கள் கலந்து கொண்டிருந்தனர். ஆயர் அவர்களுடனான சந்திப்பின் போது பாராளுமன்ற உறுப்பினர் அலிசாகிர் மௌலானா அவர்களும் தனியான சந்திப்பின் நிமித்தம் அங்கு வந்திருந்தார்.

சந்திப்பு முடிந்து வெளிவரும் போது மாவை சேனாதிராஜா அவர்கள் வெளியிட்ட 24ம் திகதி நடைபெறவுள்ள துக்கதினம் தொடர்பான விடயம் பேசப்பட்டது. இதற்கு தாங்களும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும், கிழக்கு மாகாண ஆளுநர் அவர்கள் தற்சமயம் மட்டக்களப்பில் இருப்பதாகவும் அவருடனும் இதுபற்றிப் பேசலாமே என மௌலானா குறிப்பிட்டார்.

வடமாகாண ஆளுநர் அவர்களிடம் தெரிவித்தது போலவே கிழக்கு மாகாண ஆளுநர் அவர்களிடமும் தெரிவிப்பதில் தவறில்லை என அபிப்பிராயப்பட்டதால் அவரைச் சந்தித்து இவ்விடயத்தைத் தெரிவித்தோம். அவரும் ஒத்துழைப்பு வழங்குவதாகத் தெரிவித்தார். ஆனால், இன்று பத்திரிகைகளில் வெளிவந்துள்ள செய்தி மக்கள் மத்தியில் குழப்பத்தையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பற்றி தவறான பார்வையையும் ஏற்படுத்தியுள்ளது.

நாளை 24ம் திகதி நடைபெறவுள்ள துக்கதினம் கடைப்பிடித்தல் எனும் செய்தி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தனித்துவமான தீர்மானமே தவிர இத்தீர்மானத்தில் கிழக்கு மாகாண ஆளுநர் எவ்விதத்திலும் சம்மந்தப்படவில்லை. அசந்தர்ப்பவசமாக அவரிடம் இச்செய்தி தெரிவிக்கப்பட்டதே தவிர வேறொன்றும் இல்லை.

எனினும், அரசியல் நோக்கம் கொண்ட அன்பர்கள் கிழக்கு மாகாண ஆளுநருடன் சேர்த்து இத்தீர்மானம் எடுக்கப்பட்டதாக துண்டுப் பிரசுரம் மூலம் தவறான கருத்தை மக்கள் மத்தியில் பரப்பி சொல்லொனாத் துயரில் ஆழ்ந்துள்ள மக்களைத் திசைதிருப்ப முயல்கின்றார்கள். இது முற்றிலும் தர்மத்திற்கு மாறான நடைமுறையாகும்.

எனவே அன்பார்ந்த உறவுகளே இத்தகு தவறான நெறிப்படுத்தல்களைப் புறந்தள்ளி நாளை 24ம் திகதி துன்பியலில் வீழ்த்தப்பட்ட எங்கள் உறவுகள் தொடர்பான துக்க தினமாகக் கடைப்பிடித்து மேற்சொன்னபடி கறுப்புக் கொடிகளைக் கட்டி நமது ஆழந்த துயரத்தை வெளிப்படுத்துவோம் என்று தெரிவித்தார்.