ஆனைப்பந்தி அருள்மிகு சித்திவிக்னேஸ்வரர் ஆலயத்தின்தேர்த் திருவிழா

கிழக்கிலங்கையில் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு ஆனைப்பந்தி அருள்மிகு சித்திவிக்னேஸ்வரர் ஆலயத்தின்தேர்த் திருவிழா ஆயிரக்கணகானோர் புடைசூழ சிறப்பாக நடைபெற்றது.

முட்டக்களப்பு புளியந்தீவில் இராஜகோபுரத்துடன் ஆலய தரிசனம் வழங்கும் நீண்ட வரலாற்றினைக்கொண்ட ஆனைப்பந்தி அருள்மிகு சித்திவிக்னேஸ்வரர் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் கடந்த 10ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.

ஆலயத்தின் பிரதமகுரு சிவஸ்ரீ நடராஜ சந்திரலிங்க குருக்கள் தலைமையில் நடைபெற்றுவரும் இந்த மஹோற்சவத்தில் நேற்று ஆலயத்தில் திருவேட்டை திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

இன்று காலை மூலமூர்த்திக்கு அபிசேகம் மற்றும் கொடித்தம்பத்திற்கான அபிசேகம் நடைபெற்று வசந்த மண்டபத்தில் எழுந்தருளியுள்ள பஞ்சமுக கணபதிக்கு விசேட பூஜைகள் நடைபெற்றன.

அதனைத்தொடர்ந்து பஞ்சமுக கணபதி உள்வீதியுலா வந்ததையடுத்து வெளிவீதிக்கு வந்து தேரில் எழுந்தருளினார்.

தேர்முட்டியருகே விசேட பூஜைகள் நடைபெற்று அடியார்கள் புடைசூழ மேளதாளங்கள் முழங்க பெண்கள் ஒரு பகுதியாகவும் ஆண்கள் ஒரு பகுதியாகவும் தேர் இழுக்க தேர் உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த தேர் உற்சவத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து பெருமளவானோர் கலந்துகொண்டனர்.

ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தீர்த்தோற்சவம் நாளை காலை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.